உல்டா: ‛என்ன கொடுமை சரவணன் சார்...’இன்றைய பள்ளி... இன்றைய மாணவ சிந்தனை!
TN Schools Reopen: உல்டா இது புதிய தொடர்: ‛மூன்றாவது அலை வரும் என்று கூறியிருக்கிறார்கள்... கண்டிப்பா பள்ளிகூடம் தொடராது...’மறுபடி ‛ஃப்ளே ப்ரம் ஹோம்’ தான் என்ற மனக்கோட்டையும் சிலரிடம் இருக்கிறது.
இன்று பள்ளி திறந்துவிட்டது. பள்ளி என்பதை கூட படிக்க மறந்திருப்பார்கள் பெரும்பாலான குழந்தைகள். அந்த அளவிற்கு நீண்ட... கேப். தொடர்ந்து 3 நாள் விடுமுறை விட்டு, நான்காவது நாள் பள்ளிக்கு வந்தாலே குழந்தைகளுக்கு அன்றைய நாள் பள்ளி இருக்கை, கற்றாழை முள். ஆண்டு கணக்கில் விடுப்பு இருந்துவிட்டு பள்ளி திரும்பியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட குழந்தை பருவத்திலிருந்து முதன் முறையாக பள்ளிக்குச் செல்லும் நிலை தான். என்ன தான் ஆன்லைன் வகுப்புகள், டிவி பாடங்கள் இருந்தாலும் படிப்பு கொஞ்சமும், விளையாட்டு அதிகமுமாய் பழகிவிட்டனர். இன்னும் சிலர் இனிமே இப்படி தான் இருக்கப்போகிறது என தீர்மானித்துவிட்டனர். இந்த சூழலில் தான் இன்று பள்ளி திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எப்படி இருக்கும் ஒரு மாணவனின் மனநிலை....? நாம் அந்த பருவத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்கிற கற்பனையோடு கண் முன் கொண்டு வர முயற்சித்தோம்....
வேல...வேல..வேல... எப்போதுமே வேல..!
இருக்கிற டாஸ்கில் பெரிய டாஸ்க்... பள்ளி செல்வதற்கு காலையில் எழுந்திட வேண்டும். எனக்கு தெரிந்து பெரும்பாலான குழந்தைகள் இந்த டாக்டவுன் காலத்தில் விருப்பத்திற்கு உறங்கி, எழுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான உறக்க கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று பெரும்பாலான மாணவர்கள் காலையில் எழுந்து புறப்பட கடும் சிரமம் அடைந்திருப்பார்கள். அது அவர்களோடு முடிந்து போகும் சிரமமல்ல; கண்டிப்பாக அவர்களின் தாயாரும் சிரமத்தை சந்தித்திருப்பார்கள். மதிய உணவை காலை உணவாக சாப்பிட்டு பழகியாகிவிட்டது. ஆனால் இன்று காலை 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இன்னும் சில பள்ளிகளில் வகுப்புகள் முன்பே தொடங்கும் என்பதால், 7 மணிக்கு டிபன் முடிக்க வேண்டும். இது இதுவரை(இரு ஆண்டுகளாக) சந்திக்காத கொடுமை அவர்களுக்கு.
விதவிதமா.. சோப்பு... சீப்பு... கண்ணாடி!
லாக்டவுன் காலத்தில் கழற்றி வைக்கப்பட்ட ஷூ மற்றும் சீருடைகளை அம்மா தயார் செய்திருப்பார். ஆனால், அதை அணியும் போது வருமே ஒரு மனநிலை....! விரும்பியதை போட்டு, விருப்பப்படி ஆடி, ஓடி காலத்திலிருந்து திரும்புகிறோமே... என்கிற வருத்தம் அது. கால்களுக்கு ஷூ புதிதாய் தெரியும். வெள்ளை சட்டை கசகசப்பாய் தெரியும். அதை விட முக்கியம்... மீண்டும் பொதி மூட்டையாய் புத்தகத்தை சுமக்க வேண்டும் என்கிற பாரம். சோப்பு, சீப்பு, கண்ணாடி என உடனே மினி மிலிட்டரி மேனாக மாற வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு. என்ன தான் தளர்வுகள் இருந்தாலும், இதிலெல்லாம் தளர்வுகளுக்கே வேலை இல்லை என்பதால், எல்லாம் கட்டாயம்.
காலம் நம் தோழன் முஸ்தபா...!
இதில் ஒரே ஒரு ஆறுதல் இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் நண்பர்களை பார்க்கப் போகிறோம் என்கிற ஆர்வம் அது. ஆனால் அந்த ஆர்வம் அவனை சந்திக்கும் ஒரு மணி நேரத்திலோ, இரண்டு மணி நேரத்திலோ முடிந்து விடும். அப்புறம் வழக்கம் போல, ‛டேய் நான் அப்படி இருந்தேண்டா... இப்படி இருந்தேண்டா...’ என பழையதை நினைத்து புலம்ப வேண்டியிருக்கும். 2 நாள் விடுமுறையில் நடந்ததையே 2 வாரத்திற்கு கதை சொல்லும் பள்ளி நண்பர்களுக்கு, 2 ஆண்டு விடுமுறையில் நடந்ததை சொல்ல கொஞ்சம் நேரம் எடுக்கும் தான். ஆனாலும் அங்கு வகுப்புகள் அதற்கு சாதகமாக இருக்குமா என்றால் சந்தேகம் தான். சமூக இடைவெளி என்கிற பெயரில், மாணவர்கள் விலகியிருக்கப்படுவர். இதனால் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் நிலை. இது தான் அவர்களுக்கு அதிகபட்ச கொடுமையாக இருக்கும். ஆனால் அதற்கு அப்ஷன் இல்லை!
துள்ளித்திரிந்ததொரு காலம்...!
இப்போது வகுப்பறைக்கு ஆசிரியர் வருவார். எப்படி மாணவருக்கு வகுப்பறை புதிதோ... அதே நிலை தான் ஆசிரியருக்கும். சாக்பீஸ் பிடித்து சரியாக எழுதிவிட்டார் என்றால் அவர் கெட்டிக்கார வாத்தியார் தான். அந்த அளவிற்கு ‛டச்’ விட்டு போயிருக்கும். மாணவர்கள் பலர் மாறி மாறி வந்தாலும், ஒரே வகுப்பில், ஒரே பாடத்தை சொல்லித் தரும் ஆசிரியருக்கு கிட்டத்தட்ட அந்த புத்தகம் சிட்டி ரோபோ போல பதிந்திருக்கும். ஆனால், இந்த இரண்டு ஆண்டில், புத்தகம் என்கிற வார்த்தை கூட மறந்திருக்கலாம். அவரை சொல்லி குற்றமில்லை... காலம் செய்த கோலம் அது. ஆனாலும் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் அட்டேட்டில் தான் இருந்தார்கள். ஆனால் அது பள்ளி நேரமாக இல்லாமல், டியூசன் நேரமாகவே இருந்ததால், எஞ்சி இருந்த நேரம் அவர்களின் எண்ணப்படி இருந்திருக்கும். எனவே பாடம் எடுக்கும் ‛வார்ம் அப்’ ஆகவே ஆன்லைன் வகுப்புகள் இருந்திருக்கும். இப்போது கால்கடுக்க நாள் முழுவதும் வகுப்பறையில் இருந்து பாடம் எடுக்க வேண்டும். இது கொஞ்சம் சவாலானது தான். ஆசிரியருக்கு நின்று கொண்டு பாடம் எடுக்க வேண்டும் என்கிற சவால்... மாணவனுக்கு உட்கார்ந்து படிக்க வேண்டும் என்கிற சவால். ஓடித்திரிந்தவனாயிற்றே...!
என்ன கொடுமை சார்... இது!
இது தான் மனதை திடமாக்க வேண்டிய தருணம். இப்போது வகுப்புக்கு இடையே இடைவெளி என்கிற பெயரில் 5 நிமிடம், உணவுக்கு 30 நிமிடம் என நேரம் தருவார்கள். அந்த தருணம் தான் மாணவருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ‛வீட்டில் இருந்தவரை அதே 5 நிமிடத்தையும், 30 நிமிடத்தையும் தான் படிக்க செலவழித்தோம்... இப்போ அதையே உல்டாவா தர்றீங்களே....’ என மனதிற்குள் நொந்து கொள்வார்கள். ஆசிரியர்களுக்கும் அதே எண்ணம் தோன்றலாம், தோன்றாமலும் இருக்கலாம். துருப்பிடித்த பள்ளிக்கூட மணிக்கு எண்ணெய் காப்பு நடத்துவதைப் போல, பள்ளி மாணவர்களுக்கு எண்ணக் காப்பு தேவைப்படும். ஆனால் அதற்கு நேரம் கொஞ்சம் எடுக்கும். படிக்க, படுக்க, சிரிக்க என எல்லாமே டிவியும், மொபைல் போனுமாய் பழக்கப்பட்டிருந்த பிஞ்சுகளுக்கு, வெள்ளை காகிதங்கள் வெறுப்பேற்றத் தான் செய்யும். பள்ளி பாடங்கள் பாகற்காயாய் தான் தெரியும், வீட்டுப்பாடம் பிடிக்காத கூட்டுப்பொரியலாய் தான் புரியும்.
லாலி லாலி லாலி லாலி.....!
3 மணிக்குள் வகுப்புகளை முடிக்க வேண்டும் என அரசு கூறியிருப்பதை ஆறுதலாக எடுத்துக்கொள்ளலாமா? அங்கும் பிரச்சினை இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் மதிய உறக்கத்திற்கு மாறிவிட்டார்கள். உணவு எடுத்ததுமே உறக்கம் என்கிற மனநிலைக்கு மாறியிக்கிறார்கள். அவர்கள் மதிய உணவு எடுத்தபின், 3 மணி வரை வகுப்பில் அமர்ந்து பாடத்தை கவனிப்பது என்பது, கானல்நீரில் கப்பல் விடுவதைப் போல தான் இருக்கப் போகிறது. இனி ஒரு ஆல் பாஸ் இருக்காது... ‛தாஸ்... தாஸ்... நீ இப்போ... பாஸ்... பாஸ்...’னு பாடணும்னா... கொஞ்சம் மெனக்கெட்டே ஆகனும். ஆனால் அதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், இன்னும் எத்தனை ரீதிகள் இருக்கிறதோ... அத்தனை ரீதிகளாகவும் மாற வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு இருக்கிறது. இன்னும் சிலருக்கு மனதில் ஒரு வித ஆரூடம் இருக்கிறது. ‛மூன்றாவது அலை வரும் என்று கூறியிருக்கிறார்கள்... கண்டிப்பா பள்ளிகூடம் தொடராது...’ கட்டாயம் மறுபடி ‛ஃப்ளே ப்ரம் ஹோம்’ தான் என்கிற மனக்கோட்டையும் சிலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ‛வாய்ப்பில்லை ராஜா...’ என்கிற பாணியில் தான், பெற்றோர் அனுப்பி வைத்திருப்பார்கள். 2 ஆண்டுகள் அவர்கள் பட்ட பாடு... கண் முன் வந்து போகும் அல்லவா. இனி ஆசிரியர்கள் அதை அனுபவிக்கப்பட்டும் என்கிற பெருந்தன்மை அவர்களுக்கு. இதுவரை வீட்டுக்குள்ளே மாஸ்க் போடாமல், சானிடைசர் போடாமல் இருந்தாகிவிட்டது. இனி பள்ளியில் அதெல்லாம் கட்டாயம். குதிரைக்கு கடிவாளம் போடுவது போல் தான் குழந்தைகளுக்கு அதுவும். எது எப்படியோ, ‛வெயிலோடு விளையாடி... மழையோடு உறவாடிய...‛ 21K கிட்ஸ்... ஒரு வழியா பள்ளிக்கூடம் போயிட்டாங்க!