Rabies: ரேபிஸ் கண்டறியப்பட்டால் 100% மரணம்; தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரர் - நாய்க்குட்டியை சாக்கடையில் இருந்து மீட்டபோது நாய் கடித்தும் அதை கவனிக்காமல் விட்டதால் ரேபிஸ் வந்து இறந்திருக்கிறார். இதையொட்டிய விழிப்புணர்வு பதிவு.

இதுகுறித்துப் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:
நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் நலம் பேணுபவர்களா நீங்கள்???
தெருநாய்களுக்கு நேரடியாக தங்களின் கரங்களில் உணவு புகட்டி வருகிறீர்களா?
தெருநாய்கள், பூனைகளை தொட்டுத் தூக்கி அதன் நலம் பேணி வருகிறீர்களா?
தயவு கூர்ந்து முன்கூட்டிய ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சையைப் (PRE EXPOSURE PROPHYLAXIS) பெற்றுக் கொள்வது நல்லது.
என்ன காரணம்?
நாய் உள்ளிட்ட விலங்குகளைத் தூக்கும்போது அவை எப்போது கடிக்கும்?
எப்போது பிறாண்டி வைக்கும்? என்பதைக் கணிக்கவோ கண்டுகொள்ளவோ இயலாது.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரர் - நாய்க்குட்டியை சாக்கடையில் இருந்து மீட்டபோது நாய் கடித்தும் அதை கவனிக்காமல் விட்டதால் ரேபிஸ் வந்து இறந்திருக்கிறார்.
நாள்தோறும் கல்லூரி மாணவ மாணவிகளும், ஏரியா மக்களும் தெரு நாய்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி கையில் பிஸ்கட் வைத்துப் புகட்டுவதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் அனைவரும் தயவு கூர்ந்து முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது நல்லது.
அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடித்த பின் ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சை (POST EXPOSURE PROPHYLAXIS ) இலவசமாகக் கிடைக்கிறது.
எனினும் விலங்கு நல மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல ஆர்வலர்களுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசிகளை அவர்கள் பெற விரும்பினால் அரசு மருத்துவமனைகளிலும் அதைப் போட்டுக் கொள்ளலாம். அல்லது தனியாரில் இந்தத் தடுப்பூசி டோஸ் ₹400-க்கு விற்கிறது.

முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியின் அட்டவணை இதோ
முதல் ஊசி ( 0 நாள்)
இரண்டாவது ஊசி ( 3வது நாள்)
மூன்றாவது ஊசியை ( 21வது நாள் அல்லது 28வது நாள் போட்டுக் கொள்ள வேண்டும்)
ஒருமுறை இந்த முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பு அட்டவணைப்படி ஊசி போட்டவர்களை நாய் கடித்தால் அவர்கள் இரண்டு நாட்கள் ( 0 நாள் மற்றும் மூன்றாவது நாள்) மட்டும் ரேபிஸ் தடுப்பூசி பெற்றால் போதும். இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை.
அனைவருக்குமே முன்கூட்டிய தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்க இயலாது. காரணம் அவ்வாறு வழங்கினால் நாய்கடித்த பின் வழங்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் சரியான முறையில் கிடைக்காமல் போகும்.
அதற்குப் பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இணைந்து அந்தப் பகுதி நாய்களுக்கு ஒருசேர கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது மிகவும் சிறந்த வழியாகப் படுகிறது.
முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி
நீங்கள் நாய்/ பூனை உள்ளிட்ட விலங்குகளை குறிப்பாக தெருநாய்களை அடிக்கடி தொட்டு உணவு வழங்குபவராக இருப்பின் முறைப்படி முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது நல்லது.
நாய் கடித்தாலும் பிறாண்டினாலும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
ரேபிஸ் கண்டறியப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 100% மரணம் உறுதி.
ரேபிஸ் வைரஸ் நாயிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ லேசான கடி போதுமானது.
கடித்த இடத்தை முதலில் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது மருத்துவரிடம் காட்டுவதற்கு உதவும்.
பிறகு கடித்த இடத்தை நன்றாக ஓடும் குழாய் நீரில் சோப் போட்டு பதினைந்து நிமிடங்கள் தேய்த்துக் கழுவ வேண்டும்.
அதற்குப் பிறகு டெட்டானஸ் தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கடித்த இடத்தில் சிறு துளி ரத்தம் பார்த்தாலும் கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசியால் தவிர்க்கக் கூடிய நோய். எனவே எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இன்னுயிர்களைக் காப்போம்’’ என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















