அதிகரிக்கும் தூக்கமின்மை பிரச்சனை.. ஆய்வு கொடுக்கும் எச்சரிக்கை என்ன?
கோடைக்காலத்தின் நீண்ட இரவுகளில் வெப்பம் அதிகமாக இருந்ததால், தூங்குவதில் சிக்கல் இருந்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக மனிதர்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இரவு நேரங்களில் நிலவும் வெப்பம் மிகுந்த சூழலால், தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதாக ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜர்னல் ஸ்லீப் மற்றும் பயோலாஜிக்கல் ரிதம் என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபடி, 24.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை உயரும் போது இரவு நேரங்களில் சரியாக தூக்கம் இல்லை என்று பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர். 2011-2012 ஆன் ஆண்டின் கோடைக்காலம் மிகவும் வெப்பமயமானதாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
டோக்கியோ பல்கலைக்கழகம் நாகோயா பகுதியில் நடத்திய ஆய்வில் கோடைக்காலத்தின் நீண்ட இரவுகளில் வெப்பம் அதிகமாக இருந்ததால், தூங்குவதில் சிக்கல் இருந்ததாக அங்கு வசிப்பவர்கள் கூறியுள்ளனர். மத்திய ஜப்பானில் உள்ள முக்கிய நகரங்களான டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகியவை கடந்த கோடைக்காலத்தில் அதிக வெப்பமயமான சூழலை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு 547 பேர், 2012-ஆம் ஆண்டு 710 பேர் நாகோயாவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 10 நாட்கள் ஆன்லைன் வழியாக ஆய்வில் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின் மூலம் அங்கி வசிப்பவர்களின் ’sleep quality index’ கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில், ஒருவரின் தூங்கும் நேரம், எவ்வளவு சீக்கிரம் ஒருவர் உறங்குகிறார், தூங்குவதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு மக்களின் பதில்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில், ஒருநாளின் வெப்பநிலை 24.8 டிகிர் செல்சியஸிற்கு அதிகமாக இருந்தால், அப்போது, அப்பகுதியில் வசிப்பவர்கள் தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பது அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முதியவர்களைவிட, இளம் வயதினரிடையே தூக்கம் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மனிதர்களின் தூங்கும் நேரம் பாதிக்கப்படுவதாகவும், தூங்கும் நேரம் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆய்வில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “ வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஏ.சி.யை பயன்படுத்துவோம். சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டும் நாட்களில் எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், ஏ.சி-யை பயன்படுத்துவது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.” என்றார். வெப்ப அலை காரணமாக தூக்கம் தடைபடுவது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெட்-பல்ப் (Wet-Bulb) வெப்பநிலைக் கோட்பாடு- நம் உடல் வியர்வையின் மூலமாகத் தன்னைத் தானே குளிர்ச்சியடையச் செய்துகொள்ளும் திறனை, எந்த வெப்பநிலை அளவைத் தாண்டினால் இழக்கின்றதோ, அதுவே வெட்-பல்ப் வெப்பநிலை.
வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
உடலில் நீர்ச்சத்து குறைவது, வெப்பப் பிடிப்புகள் (Heat Cramps), வெப்ப மயக்கம் (Heat Strokes) ஆகியவை அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளில் ஒன்றாகும். Heat Exhaustion காரணமாக உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல் ஆகியவை ஏற்படும். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த சூழலில் ஓய்வெடுப்பது, நீர் அருந்துவது உள்ளிட்டவைகளால் இந்தப் பாதிப்புகளில் இருந்து மீள முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.