Wheat Aappam: சாப்பாட்டு பிரியர்களே! மிருதுவான கோதுமை ஆப்பம்.. இப்படி செய்து அசத்துங்க!
சுவையான கோதுமை ஆப்பம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இட்லி, தோசை, ஆப்பம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய உணவு வகைகள் அரிசியை கொண்டே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதனால் நாம் கார்போஹைட்ரைட் மட்டுமே அதிகமாக உட்கொள்கின்றோம். நம் உடலுக்கு தேவையான சக்தியை பெற நாம் பல்வேறு தானிய வகைகளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாங்க தற்போது கோதுமை மாவை வைத்து எப்படி சுவையான ஆப்பம் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - அரை கப்
கோதுமை மாவு - ஒரு கப்
வடித்த சாதம் - அரை கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் அரை கப் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரை கப் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கப் கோதுமை மாவை இந்த அரைத்த கலவையுடன் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் முக்கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மாவை கட்டி இல்லாமல் கலந்து விட்டு கொள்ளவும். மாவை ஆப்ப மாவு பதத்தில் கரைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவை மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். உங்களுக்கு ஆப்பம் சற்று க்ரிஸ்பியாக இருந்தால் பிடிக்கும் என்றால் நீங்கள் இதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பம் சாஃப்டாக இருந்தாலே போதுமென்றால் அரிசி மாவு கலக்கத் தேவையில்லை. மாவு புளித்தவுடன் பார்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மாவு அதிக தண்ணீர் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
இப்போது வழக்கம் போல் ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து ஆப்பம் ஊற்றிக் கொள்ளவும். சோடா மாவு எதுவும் சேர்க்காமலே ஆப்பம் மிகவும் நன்றாக வரும்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

