Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?
சுவையான வாழைப்பழ போளி எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் ஓரு கப் கோதுமை மாவு, கால் டீஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த உருண்டையின் மீது சிறிது நெய் தடவி வைத்து விட வேண்டும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் பத்து முந்திரி, 10 பாதாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இரண்டு வாழைப்பழங்களை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து, கால் கப் ரவையை சேர்த்து 5 நிமிடத்திற்கு வறுக்க வேண்டும். பின் அரைத்து வைத்த வாழைப்பழ கூழை இதனுடன் சேர்க்கவும். இதை நன்கு கிளறி விட்டு இதனுடன் முக்கால் கப் பொடித்த வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி மாவுடன் நன்கு கலக்கும் வரை கிளறி விட வேண்டும்.
இந்த ஸ்டேஜில் இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். இதை மூன்று நிமிடம் கிளறி விட்டு பொடித்து வைத்துள்ள கொட்டை வகைகளை இதனுடன் சேர்க்கவும். இதை ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்.
இப்போது பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து அதை உள்ளங்கையில் வைத்து உள்ளங்கை அளவில் அடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் தயாரித்து வைத்துள்ள ரவை கலவையில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து இதை சப்பாத்தி அடைக்குள் வைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின் இதை சப்பாத்தி கட்டையை கொண்டு சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இதை தோசைக் கல்லில் வைத்து சப்பாத்தி போன்று நெய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ போளி தயார்.