Garlic : உங்க வீட்டுல தோட்டமோ, மண்தொட்டியோ இருக்கா? பூண்டு விளைச்சலை பக்காவா பண்ணலாம்.. டிப்ஸ்
ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி மற்றும் நல்ல சூரிய ஒளியில் பூண்டை நடவு செய்யும்போது நன்கு வளர்ச்சி அடையும்.
Garlic Benefits : பூண்டை மிகவும் இலகுவான முறையில் நமது வீட்டுத் தோட்டங்களில் நடவு செய்யலாம். இதற்கு தனியான பராமரிப்பு முறைகளோ அல்லது தனித்துவமான மருந்துகளோ இல்லை. பூண்டு என்பது தாவர வகைகளுள் ஒன்றாகவே இனம் காணப்படுகிறது. இவை சற்று கடினமான மற்றும் மெல்லிய பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவையாகும். இந்த நடவு செய்யப்படும் பூண்டுகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட வளர்ச்சியாகத்தான் இருக்கும்.
இவை பருவகாலத் தாவரங்கள் என்றாலும் வீட்டு தோட்டங்களில் அதனை நாம் நடவு செய்து பலனை பெறலாம். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு போன்றன பூண்டு நன்கு முற்றிய உடன் அவை அழிந்து விடுகின்றன. இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும்
பூண்டு பழங்காலத்திலிருந்தே சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மசாலாவாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் பூண்டின் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. பூண்டின் இலை ,தண்டுகள் போன்றவையும் உணவாக உட்கொள்ளப்படுகிறது.
ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி மற்றும் நல்ல சூரிய ஒளியில் பூண்டை நடவு செய்யும் போது நன்கு வளர்ச்சி அடையும். அதேபோல் வேறுபட்ட தட்ப வெப்பநிலையிலும் பூண்டு நன்றாக வளரும் தன்மையுடையது. வளமான வடிகால் வசதி கொண்ட மண் மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது. பூண்டின் சிறப்பான வளர்ச்சிக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 5 முதல் 6 வரை இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
பூண்டில் பல வகைகள் இருந்தாலும் அவை இடத்துக்கிடம், காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு, அதன் வளர்ச்சியும் நிறங்களும் மாறுபடுகின்றன. பொதுவாக நாம் சிறிய வகை பூண்டு ,பெரிய வகை பூண்டு என இரண்டாகவே பிரித்து நாம் உணவில் பயன்படுத்துகிறோம்.
பூண்டை நடவு செய்வதற்கு முதலாவதாக அதற்கான இடத்தையும் மற்றும் இரண்டாவதாக எந்த வகை பயிர் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பூண்டு வளர்ப்பது எப்படி என ஒரு சில குறிப்புக்களை இங்கு பார்ப்போம்.
பூண்டை பயிரிடும் காலம்:
குளிர் காலம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே, நிலம் வறண்ட நிலையில் இருக்கும் போது பூண்டை பயிரிடுவது சிறந்தது. ஒவ்வாத பருவ காலத்தில் பூண்டு வளர்க்கும் போது நல்ல பலன் கிடைக்காது. நல்ல வளமான மண்ணைத் தேர்ந்தெடுத்து பூண்டை பயிரிட வேண்டும். பூண்டை குளிர் காலம் தொடங்கும் முன்னர் விதைத்து விட்டால், அது நன்கு முன்னரே வேர் பிடித்து விடும்.
பயிரிடுவதற்கு முன் உங்களுக்கு தேவையான பூண்டு வகையை கவனமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் வன் கழுத்து பூண்டு மற்றும் மென் கழுத்து பூண்டு ஆகியவைகள் அடங்கும். பூண்டில் தலை பகுதி சுருண்டு காணப்படும். அதேபோல் மென் கழுத்து பூண்டில் அதிக அளவு பற்களை காண முடியும். பெரிய வகை, சிறிய வகை என இரண்டு வகை பூண்டுகளுமே நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம். பூண்டு செடியின் வளர்ச்சியை அதிகரிக்க ,மண் வளத்தை சீர் செய்ய வேண்டும். மண்ணின் மேல் 3-4 அங்குலத்தில் தாராளமாக உரம் சேர்க்க வேண்டும். பல்பு உருவாவதை அதிகரிக்க மைக்கோரைசே பூஞ்சையின் உதவியைச் சேர்க்க வேண்டும்.
12 அங்குல இடைவெளி வரிசைகளில் ,சுமார் 2 அங்குல ஆழத்திலும், 6 அங்குல இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். பூண்டை பயிரிடும்போது மொட்டு மேல் நோக்கி இருப்பது போல் பயிரிட வேண்டும். பயிரிட்ட பின்னர் அதன் மேலுள்ள மண்ணை சீர்ப்படுத்தி சிறிதாக நீர் விடலாம். இதுவே வீட்டுத் தோட்டத்தில் பூண்டு வளர்க்கும் முறையாகும். நல்ல உரமிட்டு மற்றும் தண்ணீர் விட்டு பார்த்துக்கொள்ள வேண்டும், இயற்கை உரங்கள் மற்றும் காய்கறி பழக் கழிவுகளை எடுத்து வைத்து அவற்றை உரமாக பயன்படுத்தலாம்.
பூண்டிற்கு பெருமளவு நீர் தேவைப்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். இரண்டு நாளுக்கு ஒரு முறையேனும் உரம் இட்டால் சிறந்த பலனை அடையலாம். மண்ணின் தன்மை ஈரப்பதத்துடன் இருப்பது மிகவும் சிறந்தது.
அறுவடைக்கு ஐந்திலிருந்து ஆறு இலைகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். நன்கு முளைத்து இலைகள் மஞ்சளாக மாறியபின் அறுவடை செய்யலாம். வெயில் காலத்திற்கு முன் அல்லது குளிர்காலத்தில் பூண்டை அறுவடை செய்து கொள்ளலாம். அறுவடை செய்த பூண்டை காற்றோட்டமான, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் இரண்டு வாரங்களுக்கு வைக்க வேண்டும். இதில் பெரிய வகை பூண்டு அறுவடை செய்வதிலிருந்து ஆறு மாதங்கள் வரை நன்றாக இருக்கும் எனவும், சிறிய வகை பூண்டு 9 மாதங்கள் வரை பழுதாகாமல் இருக்கும் இடமும் கூறப்படுகிறது. ஆகவே உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியதும். நோய்களை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப் பூண்டை நமது வீட்டு தோட்டங்களிலேயே நடவு செய்து சமையலில் பயன்படுத்தலாம்.