Shawarma Recipe: சுத்தமான சிக்கன்… சுகாதாரமான ஷவர்மா… நம் வீட்டிலேயே! ஓவன் இல்லாமல் ஷவர்மா செய்வது எப்படி?
Homemade Shawarma Recipe: இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற இறைச்சி சரியான தட்பவெட்பத்தில் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது நாள்பட்ட இறைச்சியாக இருந்தாலோ ஆபத்து என்கிறார்கள்.
ஷவர்மா, லெவாண்டின் எனச் சொல்லப்படுகிற மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியிருக்கும் நாடுகளின் உணவு முறையில் அங்கம் வகிக்கிற ஒன்று. துருக்கி, பாலஸ்தீனம், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான உணவு ஆரம்பத்தில் வேறுமாதிரி தயாரிக்கப்பட்டது. ஷவர்மா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு ஒரு தனி வரவேற்பு உண்டு. ஷவர்மாக்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, போர்க் ஷவர்மா, மற்றும் வெஜிடபிள் ஷவர்மா மிகவும் பிரபலமானவை. அதிலும், மெக்சிகன் ஷவர்மா, ஸ்வீட் சில்லி ஷவர்மா, லாங் ஷவர்மா என்ற வகைகளும் உண்டு. ஆனால் சில நாட்களாக ஷவர்மா(Shawarma) மிகப்பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. கேரளாவில் ஷவர்மா உண்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் கேரளாவின் பல மாவட்டங்களில் இதனை தடை செய்து வருகின்றனர்.
ஷவர்மா பிரச்சனை கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் தலைத்தூக்கியுள்ளது. கேரளாவில் அண்மையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து, ஷவர்மா பிரச்சினை தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. இதனால், தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். சட்டப்பேரவையிலும் ஷவர்மா பிரச்சினை எதிரொலித்தது. அதனால் ஷவர்மா பிரியர்கள் தற்போது கடும் வருத்தத்தில் இருக்கலாம். ஷவர்மா சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்க, ஏன் ஷவர்மா தீங்கானது என்று பார்க்க வேண்டும்.
#BREAKING | வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்க தடை!https://t.co/wupaoCzH82 | #Vellore #shawarma #ban #TamilNadu pic.twitter.com/2g6q2D1Ja9
— ABP Nadu (@abpnadu) May 9, 2022
இந்த ஷவர்மா ஏன் தீங்கு விளைவிப்பதாக மாறுகிறது என்றால் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற இறைச்சி சரியான தட்பவெட்பத்தில் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது நாள்பட்ட இறைச்சியாக இருந்தாலோ ஆபத்து என்கிறார்கள். அதனால் புட் பாய்சன் ஏற்பட்டு உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எனவே சரியான முறையில், ஃப்ரெஷ்ஷான இறைச்சியில் ஷவர்மா செய்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த தீங்கும் வராது. அப்படி நன்றாக ஷவர்மா செய்யும் கடையை எங்கு போய் தேடுவது… நமக்கு நாமே செய்துகொள்ள வேண்டியதுதான்! ஷவர்மா செய்வது அவ்வளவு சிரத்தையான காரியம் அல்ல. அதற்கான மயோனஸ், குபூஸ் செய்வதே கொஞ்சம் நேரம் எடுக்கும் காரியம் ஆகும், அதற்க்கான செய்முறைகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நம் கட்டுப்பாட்டிலேயே ஆரோக்கியமாக செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை செய்துகொள்ளலாம், இல்லை என்றால் கடையிலேயே இவை ரெடிமேடாக கிடைக்கிறது, அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
சிக்கன் ஷவர்மா செய்ய தேவையான பொருட்கள்:
- 500 கிராம் போன்லெஸ் சிக்கன்
- ½ கப் கேரட்
- ½ கப் வெள்ளரிக்காய்
- ½ கப் பச்சை குடை மிளகாய்
- ½ கப் லெட்யூஸ் எனப்படும் இலைக்கோசு
- 1 பெரிய வெங்காயம்
- 3 கப் மைதா மாவு
- 1 கப் வினிகர்
- ½ கப் வெஜிடபிள் எண்ணெய்
- 1 முட்டை
- 25 கிராம் ஈஸ்ட்
- 2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
- ¼ மேஜைக்கரண்டி Dijon Mustard
- ½ எலுமிச்சம் பழம்
- 3 மேஜைக்கரண்டி தயிர்
- 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
- 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
- தேவையான அளவு வெள்ளை மிளகு தூள்
- தேவையான அளவு கருப்பு மிளகு தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு சர்க்கரை
- தேவையான அளவு எண்ணெய்
சிக்கன் ஷவர்மா செய்முறை
காய்கறி மிக்ஸ்:
- முதலில் வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய், இலைக்கோசு, மற்றும் பூண்டை நறுக்கி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்த பின்பு சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் வினிகர், 2 மேஜைக்கரண்டி அளவு சர்க்கரை, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிளறிக்கொண்டே இருக்கவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைக்கவும்.
- பின்பு ஒரு பவுலை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், மற்றும் குடை மிளகாயை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் வினிகர் தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை ஊற விடவும்.
குபூஸ்:
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். தண்ணீர் மிதமான அளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின்னர் ஒரு bowl லை எடுத்து அதில் ட்ரை ஈஸ்ட்டை (dry yeast) போட்டு அதனுடன் நாம் சுட வைத்த தண்ணீரை ஊற்றி அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு கொட்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் நாம் dry yeast டை போட்டு வைத்திருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு பிசையவும். பிறகு அதை எடுத்து ஒரு மேஜையில் வைத்து அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு இழுத்து இழுத்து பிசைந்து விடவும். பிறகு மாவின் மீது நன்கு எண்ணெய் தடவி பாத்திரத்தை ஒரு துணியின் மூலம் மூடி அதை சுமார் 1 லிருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஊற விடவும்.
- ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மாவை எடுத்து அதை மீண்டும் சுமார் ஒரு நிமிடத்திற்கு நன்கு பிசைந்து அதை சுமார் 10 உருண்டைகளாக பிரித்து அதன் மீது மீண்டும் எண்ணெய்யை தடவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற விடவும். பிறகு ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் சிறிது மைதா மாவை தூவி அதில் நாம் ஊற வைத்திருக்கும் மைதா மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்திக்கு தேய்பதை விட சிறிது கனமாக தேய்த்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதில் போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு மீதமுள்ள ரொட்டிகளையும் சுட்டு எடுத்து தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.
மயோனஸ்:
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெஜிடபிள் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, கருப்பு மிளகு தூளை, ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி வினிகர், மற்றும் Dijon கடுகை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
சிக்கன்:
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள், ஒரு மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தயிர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி வினிகரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து பக்குவமாக போட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வேக விடவும்.
- தண்ணீர் நன்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு சிக்கனை எடுத்து கீழே வைத்து கொள்ளவும்.
ஷவர்மா:
- ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் வினிகரில் ஊற வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் lettuce மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் Mayonnaise சை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து நாம் சுட்டு வைத்திருக்கும் குபூஸை எடுத்து அதில் மயோனஸை தடவி பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப Mayonnaise கலவை மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் சிக்கனை வைத்து அதை உருட்டி சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் ஷவர்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.