Cold Coffee: கோல்ட் காபி.. வெயிலுக்கு இதமா இப்படி செய்து குடிங்க! செம்மையா இருக்கும்!
சுவையான கோல்ட் காபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காபி பவுடர் - 2 ஸ்பூன்
சர்க்கரை - 4 ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 1 ஸ்பூன்
ஐஸ் கியூப் - தேவையான அளவு
பால் - தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து 4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு ஸ்பூன் காபி பவுடருக்கு இரண்டு ஸ்பூன் சர்க்கரை என்ற அளவில் சேர்க்க வேண்டும்.
இப்போது மிக்ஸி ஜாரில் சேர்த்த சர்க்கரையையும் காபி பவுடரையும் நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு பவுடராக அரைத்ததும், இதனுடன் 4 ஐஸ் கட்டிகளை சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைக்க வேண்டும். மீண்டும் மூடியை திறந்து 3 ஐஸ் கியூப்ஸை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து பீட்டரால் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்ற திக்கான க்ரீம் பதம் வரும் வரை பீட்டர் கொண்டு இதை அடித்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு டம்ளரை எடுத்து அதன் உட்பகுதியில் அரை ஸ்பூன் சாக்லேட் சிரப் சேர்த்து விட்டு பின் டம்ளரின் அடிப்பகுதியில் தூளாக உடைத்த ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும். பின் இதன் மீது நாம் தயாரித்து வைத்துள்ள கிரீமை 2 ஸ்பூன் அளவு சேர்க்க வேண்டும். இதன் மீது காய்ச்சி ஆற வைத்து ஃப்ட்ஜில் வைத்து குளிர்வித்த பாலை சேர்க்கவும். டம்ளரின் முக்கால் பாகம் அளவு வரை பாலை சேர்த்துக் கொள்ளலாம். பின் இதன் மீது நாம் தயாரித்து வைத்துள்ள கிரீமை 1 அல்லது இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மீது அரை ஸ்பூன் அளவு சாக்லேட் சிரப் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து பரிமாறலாம். அவ்வளவு தான் சுவையான கோல்ட் காபி தயார்.