Carrot Gulab Jamun: இனிப்பாக சாப்பிட ஆசையா? சுவையான கேரட் குலாப் ஜாமுன் ரெசிபி இதோ!
Carrot Gulab Jamun: கேரட் குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே காணலாம்.
கேரட் குலாப் ஜாமுன்
என்னென்ன தேவை?
- கேரட் - 6
- சர்க்கரை - 2 கப்
- ஏலக்காய் - 2
- நெய் - ஒரு கப்
- பால் - ஒரு கப்
- ரவை - ஒரு சிறிய கப்
- பால் பவுடர் -ஒரு கப்
- எண்ணெய் - பொரிப்பதற்கு
- பிஸ்தா - சிறிதளவு
செய்முறை:
முதலில் குலாப் ஜாமுன்களை ஊறவைக்க சர்க்கரை பாகை தயாரித்து ஆறவைக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும். கொதிவந்ததும் அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடித்து சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து பாகு போல பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தனியே ஆறவிட வேண்டும்.
இப்போது ஜாமூன்களை தயாரிக்கலாம். கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகாளாக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு கப் நெய் சேர்த்து அதில் கேரட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து ஒரு கப் பால் சேர்த்து அதில் கேரட்டை வேகவிடவேண்டும். இப்போது ரவையை சேர்க்கலாம். நன்றாக கிளற வேண்டும். கேரட், ரவை இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிரியாக இருக்கும்போது பால் பவுடரை அதில் சேர்த்து கிளற வேண்டும்.
பால் பவுடர் சேர்த்ததும் அது நன்றாக இறுகிவிடும். உருண்டைகளாக உருட்ட ஏற்ற அளவில் மாவு இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக 10 நிமிடங்கள் ஆறவிடவும்.
இப்போது, அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடாவதற்குள் குலாப் ஜாமூன்களை சிறிய உருண்டைகளாக தயாரிக்கவும். எண்ணெய் சூடானதும், உருண்டைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.கொஞ்சம் சூடு ஆறியதும் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து 1-2 மணிநேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான கேரட் குலாப் ஜாமுன் தயார்.
மேலும் வாசிக்க...
Aval laddu: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆப்சன் - சிவப்பு அவல் லட்டு - ரெசிபி இதோ!