DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
கடலூர் மாவட்டத்தில் கூட்டணி அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பை வெளியிடவில்லை.

கடலூரில் இன்று தேமுதிக மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக ஏற்கனவே, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.
கூட்டணி தர்மம்:
இந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை. கூட்டணி தர்மத்தை மதித்து மக்களுக்காக தலைமை எடுக்கும் முடிவிற்கு எதையும் எதிர்பாராமல் எந்த ஆசாபாசத்திற்கும் அடிபணியாமல் ஒரே கள வீரர்கள் தேமுதிக வீரர்கள். காசு கொடுத்தால்தான் உங்கள் ஆட்கள் களத்திற்கு வருவார்கள். கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவு எடுத்து அறிவித்தால் கள வீரர்களாக வெற்றி வீரர்களாக தேமுதிக தொண்டர்கள் இருக்கிறார்கள்.
இந்த மேடையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளமாக வாழ்ந்தவர் நமது தலைவர். எதற்கும் அஞ்சாத துணிந்த வீரராக நம் கேப்டன் வாழ்ந்துள்ளார். கேப்டனுக்கு இணை கேப்டன் மட்டுமே.
யாருடன் கூட்டணி?
உங்கள் எல்லாருடைய பதில், உங்கள் எல்லாரும் இங்கு எதிர்பார்ப்பது ஒரே ஒரே விஷயம். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அவர்கள் தங்கள் கருத்தை ஒளிவு மறைவின்றி அவர்கள் கருத்தை ஆலோசனையாக வழங்கியுள்ளார்கள். அவர்கள் கருத்தை நான் மட்டும் தனியாக அமர்ந்து படித்தேன்.
யாரோட கூட்டணி நாம் வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோம். ஆனால், அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. தை பிறந்தால் வழி பிறக்கும். நாம் இத்தனை நாட்கள் சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனிமேல் சாணக்கியராக வாழலாம்.
நிதானமாக அடிப்போம்:
ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் யார், யாருடன் கூட்டணி என்று சொல்லாதபோது. நாம் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டை போல சொல்ல வேண்டும்? நின்று நிதானமாக அடிப்போம். தேமுதிக-விற்கு என்று ஒரு கெளரவம் உண்டு. மரியாதை உண்டு. என் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி. என் தொண்டர்கள் என்ன சாெல்கிறார்களோ அதுவேதான் என் வாக்கு.
நாமும் தெளிவாக சிந்தித்து, நேரம் எடுத்துக்கொண்டு ஒரு மகத்தான கூட்டணியை உங்கள் ஒப்புதலுடன்தான் நாம் அறிவிப்போம். யாருடன் நாம் கூட்டணி வைப்போமா அவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள். கொஞ்ச நாள் காத்திருப்பாேம். நமக்குரிய இடங்களையும், தொகுதிகளையும் உரிய முறையில் பெற்று ஒரு கூட்டணி அமைப்போம்."
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவார் என்று மிகவும் எதிர்பார்த்த வந்த தேமுதிக தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும், தேமுதிக-வினர் திமுக மற்றும் அதிமுக பக்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





















