TVK VIJAY: சைலண்ட் மோடில் விஜய், ஆதவ் அர்ஜூனா.! வாயை திறக்காததற்கு இது தான் காரணமா.?
Jananayakan tvk vijay: ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட முடியாதபடி சென்சார் குழு செக் வைத்துள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. அதேநேரம் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் அமைதி காப்பது ஏன்.? இது தான் காரணமா.?

அரசியல் களத்தில் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளது. எனவே திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக திரைத்துறையில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த 2024ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அப்போது தான் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதற்கு ஏற்ப பட சூட்டிங் நடைபெறும் போதே இரண்டு மாநில மாநாட்டை நடத்தி பல லட்சம் பேரை திரட்டி அசத்தியிருந்தார்.
ஜனநாயகன் வெளியிட தடை
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பட விளம்பரங்களும் நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் மலேசியாவில் இசை வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. திரைப்படத்திற்கான டிக்கெட் விநியோகமும் ஒரு சில மாநிலங்களிலும் தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் மூலம் தடை ஏற்பட்டது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு யூ/ ஏ சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து திடீரென சென்சார் குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் மறு தணிக்கைக்கு உத்தரவிட்டார்.
விஜய்க்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகன் திரைப்பட குழு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் திரைப்படத்தில் மத்திய பாதுகாப்பு படை சின்னம், மத ரீதியான கருத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனநாயகன் படக்குழுவும் உரிய விளக்கம் அளித்தது. இதனைடுத்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அடுத்த நொடியே மத்திய அரசின் சென்சார் குழு சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதியமே விசாரணை நடைபெற்ற நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மவுனம் காக்கும் விஜய்
இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை விமர்சிக்கவில்லை. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக ரசிகர்களுக்கும் எந்த கருத்தையும் கூறவில்லை. எப்போதும் சமூகவலைதளத்தில் திமுக அரசை விமர்சித்து ஆக்டிவாக பதிவிட்டு வரும் ஆதவ் ஆர்ஜூனாவும் மத்திய அரசுக்கு எதிராக எந்த பதிவையும் கூறாமல் வாய் மூடி மவுனமாக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கரூர் சம்பவம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் நடைபெறும் விசாரணையில், ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமாரிடம் விசாரணை நடைபெற்றது.
விஜய் மவுனம் ஏன்.?
அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக கிடுக்கிபிடி கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த விசாரணையில் திடீர் திருப்பதாக தவெக தலைவர் விஜய்யையும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். எனவே கரூர் சம்பவத்தால் விஜய்க்கு நெருக்கடி தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற காரணத்தால் விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்கள் அமைதி காப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





















