Butter Beans Kurma: சப்பாத்தி பூரி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன் இதுதான்! பட்டர் பீன்ஸ் குருமா செய்வது எப்படி?
சாதம், தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி உடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சைடிஷ். பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பார்க்கலாம் வாங்க.
குருமாவில் பல வகைகள் உள்ளன. இப்போது நாம் சாதம், சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிடக் கூடிய டேஸ்டியான பட்டர் பீன்ஸ் குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பட்டர் பீன்ஸ், உருளை கிழங்கு-2, முருங்கைகாய் -2, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை- தேவையான அளவு, தேங்காய் - 2 கீற்று, சின்ன வெங்காயம்- 100 கிராம், தக்காளி-2, கொத்தமல்லி.
செய்முறை
பட்டர் பீன்ஸை தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். பின்னர்,100 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வரும் போது அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். ஒரு பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு நறுக்கிய முருங்கை காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இப்போது ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்துள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். முறுங்கை காய் நன்றாக வெந்த பிறகு, அதில் வேகவைத்து எடுத்த பட்டர் பீன்ஸ் மற்றும் உருளை கிழங்கையும் நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் இரண்டு கீற்று தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, 10 சின்ன வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் பச்சை வாசனை போன பிறகு,குருமா கெட்டியாகும். அப்போது குருமாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக கொஞ்சம் மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி விட்டு குருமாவை இறக்கி விடலாம்.இந்த குருமா சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு டேஸ்டியான சைடிஷ்சாக இருக்கும்.