இனிப்பு அதிகமாக சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த பிரச்சனை காத்திருக்கு.. ஆய்வு - விவரம்!
இனிப்பு அதிகமாக கொண்ட உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு தீவிர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் சாப்பிடும் உணவும் உடல், மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். University of Surrey-யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்திய நடத்திய ஆய்வில் இனிப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மன உளைச்சல்,மன அழுத்தம், நீரிழ்வு, உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள ஏற்படுதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ’Journal of Translational Medicine’ என்ற ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில் அதிகமாக இனிப்பு உணவுகளை விரும்பி சாப்பிடுவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் இரத்தத்தை பரிசோதனை செய்தபோது, இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் மாறுதல் ஏற்படுகிறது. அதோடு, மனநலனும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உணவில் இனிப்பு. சர்க்கரை நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் அவர்களுக்கு 31 சதவீதம் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆரோய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ’Nophar Geifman’ இது தொடர்பாக தெரிவிக்கையில்,” அதிகமாக இனிப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவது உடல் நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல. ஒருவர் எதை சாப்பிட வேண்டும் என்று சொல்வது என்னுடைய வேலை அல்ல. ஆனால், தகவல், உண்மையை சொல்வது அவசியமானது என கருதுகிறேன்.” எனத் தெரிவித்தார்.
இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள், யோகர்ட், டார்க் சாக்லேட் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். ஸ்மூத்தி தயாரிக்கும்போது பேரீட்ச்சை பழம் உள்ளிட்ட இயற்கையாக இனிப்பு சுவை தர கூடியதை சேர்க்கலாம்.
உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனித்து கேளுங்கள். என்ன சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிடும்போது ஸ்மார்ட்ஃபோன் பார்க்காமல், எதை பற்றியும் சிந்தனையும் இல்லாமல் தட்டில் என்ன இருக்கிறது என்ன சாப்பிடுகிறோம், என்ன சுவையில் இருக்கிறது என்பதை கவனித்து சாப்பிட வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சில உணவுகள் உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் அதை தவிர்க்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அதனால் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வெள்ளை சோறு பிடிக்கும் எனில் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றில்லை. வெள்ளை சோறு சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு தவிர்ப்பவர்கள் தாராளமாக அதை பின்பற்றலாம். ஆனால், வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும். அப்போதுதான் மகிழ்ச்சியாக சாப்பிட முடியும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.