Children Height Growth: உயரம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.. மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?
பெற்றோர்கள் குழந்தையின் உயர வளர்ச்சியைத் தவறாமல் கண்காணிப்பது அவசியம். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்த பிரச்னை தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக ஒரு மனிதனின் உயரம் என்பது சராசரி அளவில் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அது அதிகமாக இருந்தாலும் பிரச்னை, குறைவாக இருந்தாலும் பிரச்னை என்ற நிலையில் இது சமூகத்தில் அந்த நபர்கள் சந்திக்கும் பிரச்னையாகவும் மாறி விடுகிறது. இப்படியான நிலையில் உயரம் அதிகரிக்க சிறுவயதில் இருந்து சில முயற்சிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனைப் பற்றிக் காணலாம்.
பொதுவாக மரபணு காரணிகளைப் பொறுத்து ஒரு குழந்தையின் உயர வளர்ச்சி என்பது உள்ளதாக கூறப்படுகிறது . அதேசமயம் இந்த நடைமுறையில் ஊட்டச்சத்து, தூக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவையும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு அதன் ஆரம்பம் காலம் தொட்டு சரியான பழக்க வழக்கங்கள் இருந்தால் சரியான வயதில் அவர்களின் அதிகபட்ச உயரத்தை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குழந்தை நல மருத்துவரான டி. ஸ்ரீகாந்த் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார். அதன்படி உணவு, தூக்கம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை உயர வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஒரு மனிதனின் எலும்புகள் வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதனால் தான் சிறுவயதில் இருந்தே பால் பொருட்கள், முட்டை, மீன், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை கொடுத்து பழக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நாம் அதிகமாக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை கொடுப்பதால் உடல் எடை அதிகரித்து அவர்கள் வளர்ச்சியிலும் தடையானது உண்டாகிறது. அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் இரவில் ஆழ்ந்த உறக்கத்தின் போது தான் வளர்ச்சி ஹார்மோன் அதிகளவில் சுரக்கிறது. இப்போதுள்ள காலக்கட்டத்தில் நாம் சரியாக உறங்காமல், அதிக செல்போன் பயன்பாட்டால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இவையாவும் இந்த ஹார்மோன் சுரப்பை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் மின்னணு சாதனங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வயது முதலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற போதுமான உறக்கத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக குழந்தைகள் வளரும் பருவத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மின்னணு திரையில் அதிக நேரம் செயல்படுவதால் உடல் செயல்பாடு குறைகிறது. இது உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை இருமடங்காக அதிகரிக்கிறது. எனவே சிறு வயதில் அவர்கள் ஓடுதல், குதித்தல், நீந்துதல், மிதிவண்டி ஓட்டுதல் போன்றவைகளை பழக்க வேண்டும். இவை வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
Also Read: MLA Pallavi: இணையத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் MLA பல்லவி.. குவியும் கண்டனம்.. மனசாட்சியே இல்லையா?
அதுமட்டுமல்லாமல் பெற்றோர்கள் குழந்தையின் உயர வளர்ச்சியைத் தவறாமல் கண்காணிப்பது அவசியம். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்த பிரச்னை தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காரணம் இதனை வெறும் உயரம் குறைபாடு பிரச்னை என எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை ஹார்மோன் குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, நாள்பட்ட நோய், மரபணு சார்ந்த பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது என மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















