‛மண்ணில் இந்த பிரியாணி இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...’
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இது வெஜ் பிரியாணியாக இன்பத்தை தரும். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பல வகை பிரியாணியாக ருசிக்கும். இதனால் தான் நாங்க பிரியாணி பிரியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!
பிரியாணி என்றவுடன் பலருக்கு நியாபகம் வரும் பாடல் வரி 'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது...' என்ற பாடல் தான். இந்தப் பாடலில் குறிப்பாக 'திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு' என்னும் வரி இருக்கும். அந்த வரி பிரியாணி பிரியர்களுக்கு என்றே எழுதப்பட்டது போல் இருக்கும். தட்டு நிறையே பிரியாணி கொஞ்சம் வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் ஆனந்தத்தின் உச்ச கட்டமாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக சீரக சம்பா பிரியாணி ஒரு ரகம் என்றால் பாசுமதி அரிசியில் செய்த பிரியாணி ஒரு ரகம். இவற்றில் எந்த அரிசியில் செய்தாலும் கூட ஹைதராபாத் தம் பிரியாணி முறையில் செய்தால் அதற்கு கூடுதல் சுவை இருக்கும். அப்படிப்பட்ட பிரியாணியின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள நாம் பல நூற்றாண்டில் தாண்டி செல்ல வேண்டும். ஏனென்றால், பாரசீக நாட்டின் போர்வீரர்கள் மசாலாவுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடுவது தான் நாம் தற்போது குறிப்பிடும் பிரியாணி. போர் களத்திற்கு வீரர்களுக்கு அப்போது பெரியளவில் உணவு பொருட்கள் எடுத்து செல்ல முடியாது.
இதன் காரணமாக அவர்கள் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலா கலவை ஆகியவற்றை எடுத்து செல்வார்கள். போர் வீரர்கள் ஓய்வு எடுக்கும் போது இந்த அரிசி மற்றும் மசாலா கலவையுடன் அப்பகுதியில் இருக்கும் விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை சேர்த்து சமைப்பார்கள். இந்த முறை தான் பிற்காலத்தில் பிரியாணி. பாரசீக மொழியில், பிரியாணி என்பது மசாலாவுடன் அரிசி சேர்த்து சமைக்கப்பட்ட உணவு என்பது பொருள்.
அப்படிப்பட்ட பிரியாணி என்பது தற்போது வெறும் உணவு அல்ல. அது ஒரு உணர்ச்சியாக மாறியுள்ளது. குறிப்பாக சிங்கிள் பசங்களுக்கு ஆறுதல் அளிக்கும் உணவு பிரியாணி தான். பிரியாணி வைத்து காமெடி நடிகர் விவேக் நடித்த ஒரு காமெடி மிகப் பெரிய ஹிட். அந்த காமெடியில் அவர் 5 ரூபாய்க்கு காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமா உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்ற வசனம் வரும். அப்போது முதல் மலிவு விலைக்கு பிரியாணி எங்காவது விற்கப்பட்டால் பலருக்கு இந்த காமெடி நியாபகத்திற்கு வரும்.
பிரியாணி பிரியர்களுக்கு பிரியாணி என்பது ஒரு வித ஆனந்தம். அது அவர்களுக்கு ஒரு அளவில்லாத மனநிறைவை தருகிறது. உலகத்திலேயே ஒரு மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே பொருள் சாப்பாடு தான். மற்ற அனைத்து பொருட்களுக்கும் மனிதர்கள் எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் உணவு ஒன்று மட்டும் தான் வயிறு நிறைந்தபின் போதும் என்பார்கள். ஆனால் பிரியாணி பிரியர்கள் போதும் என்று சொல்லும் போது அவர்களின் வயிறு மட்டுமல்லாமல் மனதும் நிறைவாக இருக்கும்.
பிரியாணியை வெறுப்பவர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி, அது என்ன மற்ற உணவுகளில் இல்லாதது இந்த பிரியாணியில் உள்ளது என்பது தான். ஆனால் அதற்கு பிரியாணி பிரியர்கள் கூறுவது ஒன்று தான். எங்கள் பிரியாணியுடன் மட்டன்,சிக்கன்,மீன்,ஈரால், காய்கறி என எது சேர்த்தாலும் அதன் சுவை சிறப்பாக தான். இத்தகைய சிறப்பு கொண்ட உணவு வேறு எதுவுமே இல்லை. அத்துடன் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இது வெஜ் பிரியாணியாக இன்பத்தை தரும். அதேபோல் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பல வகை பிரியாணியாக ருசிக்கும். இதனால் தான் நாங்க பிரியாணி பிரியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
பிரியாணி பிரியர்கள் பெரும்பாலானவர்கள் சிங்கிளாக உள்ளனர். அவர்கள் ஒரு காதல் பாடலை மாற்றி பிரியாணிக்காக பாட வேண்டும் என்றால் அது 'மண்ணில் இந்த காதலன்றி ..' பாடல் தான். அதை அவர்கள் மாற்றி, "மண்ணில் இந்த பிரியாணியின்றி யாரும் வாழ்தல் கூடுமோ .. பிரியாணி இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்று பாடிக் கொண்டே போவார்கள். பிரியாணி என்பது ஒரு உணவு மட்டும் அல்ல பலருக்கு அது ஒரு விதமான போதையாக உள்ளது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.