குழந்தைங்க ரொம்ப கோவப்படுறாங்களா? பதற்றப்படுறாங்களா? இதை செய்யுங்க.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..
சில கோபங்களை வெளிப்படுத்த முடியாமல், மனதிலேயே தேக்கிவைத்து, அது மனரீதியான பிரச்சனை மற்றும் உடல் ரீதியான, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றுக்கும் நம்மை கொண்டு செல்கிறது.
மனிதர்கள் அதிகப்படியான நேரங்களில், உணர்வு மிகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். சந்தோஷம், கோபம்,வருத்தம், துக்கம்,பயம் என சொல்லிக்கொண்டே போகலாம். இதில் கோபம் என்ற உணர்வு, நம்முடைய,சராசரி பொருள் சார்ந்த வாழ்க்கையின் காரணமாக,நம் அனைவரிடமும் வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது.சில கோபங்களை,நம்மால் வெளிப்படுத்த முடியும்.சில கோவங்களை வெளிப்படுத்த முடியாமல், மனதிலேயே தேக்கி வைத்து,அது மனரீதியான பிரச்சனை மற்றும் உடல் ரீதியான,ரத்த அழுத்தம்,நீரிழிவு போன்றவற்றிற்கும் நம்மை கொண்டு செல்கிறது.
பெரியவர்களான நாம்,நம் எண்ணத்தை வேறு ஒன்றில் செலுத்துவது,பாட்டு கேட்பது,அந்த சூழ்நிலையை தவிர்ப்பது, உடற்பயிற்சி அல்லது தியானம் என ஏதாவது ஒன்றின் மூலம்,நம்மை சரி செய்து கொள்கிறோம்.இதுவும் குறைந்த சதவிகித அளவு மனிதர்களே,கோபத்தை கடந்து, வெளி வருகிறார்கள். இப்படி இருக்கையில்,குழந்தைகள் எவ்வாறு கோபம்,படபடப்பு அதனால் ஏற்படும் விரக்தி ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று,பெரியவர்களான நாம்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
சூழ்நிலையை கடந்து போகச் சொல்லுங்கள்:
உங்கள் குழந்தைகள் நியாயமான அல்லது நியாயமற்ற காரணங்களுக்காக கோபப்படும்போது,அந்த சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள்.இத்தகைய சூழ்நிலை மூலம் அவர்களின் மனது வேறு விஷயங்களுக்கு திருப்பப்பட்டு, கோபம் குறைய ஏதுவாக இருக்கும். இப்படி சூழ்நிலை மாறிய பின்னர், நடந்தவற்றை,அவர்களை ஒரு முறை கதையாக சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள்.தங்கள் மீது தவறு இருக்கிறதா, அல்லது எதிராளியின் மீது தவறு இருக்கிறதா, இவற்றை சரி செய்து கொள்ள வேண்டுமா, இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன,என்பனவற்றை விரிவாக சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள். இரண்டோரு சூழ்நிலைகளில், அவர்களுடன், பேசி இத்தகைய சூழ்நிலைகளை,விவேகமாக காது கொடுத்து நீங்கள் கேட்டு, அதில் உள்ள சரி தவறுகளை, அவர்களுக்கு உணர்த்துங்கள்.
விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு கலையை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்:
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று சொல்லுவார்கள்,கோபமான சூழ்நிலைகள் நம்முடைய அறிவை மழுங்கடித்து,தேவையில்லாத முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஆகவே,உங்கள் குழந்தைகள் கோபப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு,ஏற்கனவே நீங்கள் ஒரு விளையாட்டையோ,அல்லது சிறிது தூரம் நடப்பது ,அல்லது ஏதேனும் ஒரு இசையை கேட்பது,அல்லது படம் வரைதல், நடந்தவற்றை டைரியில் எழுதி விட்டு,வேறு சிந்தனைக்கு போவது என,அவர்களை பழக்கப்படுத்துங்கள்.இதன் மூலம் கோபம்,படபடப்பு மற்றும் அதனால் ஏற்படும் விரக்தி என்ற உணர்வில் இருந்து அவர்கள் வெளியேறி, நாளடைவில்,எந்த சூழ்நிலையையும், சீர்தூக்கிப் பார்க்கும் மனநிலையை பெறுவார்கள்.
நீதி மற்றும் சமயோஜிதம் நிறைந்த கதைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்:
நீதி போதனைகள் மற்றும் சமயோஜினம் நிறைந்த கதைகளை அவர்களுக்கு நிறைய சொல்லுங்கள். அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்கள்,கோபப்படும் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில், எவ்வாறு செயல்படுகிறார்கள், என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.இதன் மூலம் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் கோபப்படும் போது,கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்களை முன்மாதிரியாக கொண்டு தங்கள் கோபத்தை கையாளுவார்கள்.
இப்படியாக குழந்தைகளுக்கு,தங்கள் கோபத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை, உடனிருந்து ஒன்று இரண்டு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு புரிய வைப்பதன் மூலமாக,சிறப்பான எதிர்காலத்தையும்,நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.