TAHDCO Medical Coding Training: 100% வேலை நிச்சயம்; ரூ.70,000 வரை ஊதியம்; 2014 முதல் 2022 பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்..
மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அரசு நிறுவனமான தாட்கோ அறிவித்துள்ளது. இதில் 100% வேலை வழங்கப்படுவதோடு, ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அரசு நிறுவனமான தாட்கோ அறிவித்துள்ளது. இதில் 100% வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது.
தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, பல்வேறு திட்டங்களின்கீழ் லட்சக்கணக்கில் நிதியுதவியை வழங்கி வருகிறது. இந்த நிலையில், B.Sc (Life Science) முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/ மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் இளங்கலை அறிவியல் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ன தகுதிகள்?
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும்.
இளங்கலை அறிவியல் (Life Science) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்கவேண்டும்.
2014 முதல் 2022 வரை பி.எஸ்சி. முடித்த பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
3 மாதப் பயிற்சி
தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000-ஐ தாட்கோ வழங்கிவிடும்.
பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்குஅனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு, ISO (International Organization for Standardization) தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும்.
100 சதவீதம் வேலை உறுதி
மேலும் பயிற்சியில் தேர்ந்த மாணாக்கர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுக் தரப்படும். வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டில் இருந்தபடியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம்.
ஊதியம் என்ன?
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.15,000/-வரை பெறலாம்.
பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாகப் பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு மேற்கொள்ளலாம்.