Airport Job: விமான நிலையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Airport Job: விமான நிலையத்தில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத்திறன். ஆளுமை மேம்பாடு, விமானபாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின்குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சியில் இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தினந்தோறும் பல ஆயிரம் விமானங்கள் பல நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. எனவே விமான நிலையத்தை சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக பயிற்சிகள் அளித்து விமான நிலையத்தில் பணியில் சேர உதவி வருகிறது.
விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின்குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35வயது வரை உள்ளவர்களாகவும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.
இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத்திறன். ஆளுமை மேம்பாடு, விமானபாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின்குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கிபடிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்கள்.























