Food Tips: மசாலா பொருட்களில் கலப்படமா..? எவ்வாறு எளிதாக கண்டுபிடிப்பது?
நமது வீடுகளில் மிளகாய் தூய், மஞ்சள் தூள், மிளகு ஆகியவை சமையல் அறையில் தவிர்க்க முடியாத பொருட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மசாலா பொருட்களில் கலப்படம் ஏற்பட்டால் அதனை எப்படி கண்டறிவது என்பது குறித்து அறிவோம். இந்திய உணவு வகைகளில் வாசனைப் பொருட்களுக்குப் பெரும் பங்கு உண்டு. நிறமும் மணமும் தரும் மஞ்சள் தொடங்கி நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட மிளகு வரை விதவிதமான மசாலா பொருட்கள் உண்டு. அவற்றின் தரம் அறிய இதோ சில டிப்ஸ்:
மிளகாய் தூள்:
நிறைய கடைகளில் மிளகாய் தூளுக்கு நிறம் தரும் செங்கல் தூளை கலக்கின்றனர். மிளகாய் தூள் அன்றாடம் சமையலுக்குத் தேவையான பொருட்களில் ஒன்றாக உள்ளது. அதனால் மிளகாய் தூளில் மிகப் பெரிய அளவில் கலப்படம் நடப்பது சகஜமாக நடக்கிறது. உண்மையான தரமான மிளகாய் பொடியாக இருந்தால் அவற்றை நீங்கள் தண்ணீரில் கலந்தவுடன் அடியில் சிவப்பாக ஏதேனும் தேங்கியிருந்தால் அது நிச்சயமாக கலப்பட பொடி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூள்:
மஞ்சள் தூள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரக் கூடியது. மஞ்சள் உணவுக்கு வண்ணத்தை சேர்ப்பதோடு கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. அதனால் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் இருந்தே மஞ்சளை தங்கள் உணவுகளில் சேர்த்து வருகிறார்கள். மஞ்சள் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பருவகால குளிர் மற்றும் காய்ச்சலை விரட்ட உதவுகிறது. ஆனால் இதில் மெட்டானில் யெல்லோ என்ற ஒரு வேதிப் பொருளை கலக்கின்றனர். இதனைக் கண்டுபிடிக்க மஞ்சள் தூளில் கொஞ்சம் ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் சேர்த்து அதன் சுத்தத்தை உறுதி செய்யலாம். அவ்வாறு சேர்க்கும் போது மஞ்சளின் நிறம் மஞ்சள், நீலம், பர்பிள் என மாறினால் அது போலி மஞ்சளாகும்.
மல்லித் தூள்:
நம் நாட்டில் விளையும் மற்ற மசாலாப் பொருட்களை போலவே, மல்லியும் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு மசாலா பொருளே. இந்த செடியின் உள்ள பழத்தை காய வைத்து மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதனை பொடியாக்கியும் உபயோகிக்கலாம். 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. அதனால் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. உணவை தரம் பிரிக்கும் அமைப்பு ஊட்டச்சத்து வளமையாக உள்ள பொருளாக மல்லியை அறிவித்துள்ளது. குணப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளதால் மல்லி பொடிக்கு தனியாக ஒரு மவுசு இருந்து கொண்டு உள்ளது. ஐரோப்பியாவில் பல இடங்களில் இதனை "ஆன்டி-டயபெடிக்" செடி என்று கூட அழைக்கின்றனர். இந்த மல்லியையும் விட்டுவைக்காமல் கலப்படம் நடக்கிறது. மல்லியை முகர்ந்து பார்த்தே அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம். மல்லித்தூளில் மரத் தூளை கூட கலப்படம் செய்கின்றனர்.
லவங்கப் பட்டை:
லவங்கப் பட்டையில் கொய்யா மரப் பட்டையைச் சேர்ந்து கலப்படம் செய்கின்றனர். இதில் அசலை கண்டுபிடிக்க நீங்கள் அதை உங்கள் உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். உள்ளங்கையில் தேய்க்கும்போது சிவப்பு, பழுப்பு நிற கறை படிந்தால் அது அசலான லவங்கப் பட்டை. போலியான லவங்கத்தில் நிறமே வராது.
கரு மிளகு:
கரு மிளகுடன் பப்பாளி விதைகளைக் கலந்து விற்கின்றனர். மிளகை தண்ணீரில் போட்டால் தண்ணீரின் கீழே தங்கும் மிளகு தரமானது. நீரில் மிதக்கும் மிளகுகள் போலியானவை.
இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )