கடந்த 14 ஆண்டுகளாக பிறந்த குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருமிதம்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிறந்த குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் (AIDS) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆட்டோ பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்விலும் பங்கேற்றார்.
ஆட்டோ பேரணி மற்றும் துண்டுப் பிரசுரங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனியர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆட்டோ பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம்
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தனது முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உரை - விழிப்புணர்வு வலியுறுத்தல்
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் எய்ட்ஸ் நோய் பரவும் காரணங்களான பரிசோதிக்கப்படாத இரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசியைப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். ஹெச்.ஐ.வி (HIV) வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து எய்ட்ஸ் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆபத்தையும் அவர் விளக்கினார்.
காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனை அவசியம்
"ஹெச்.ஐ.வி-யும், காசநோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது" என்பதை வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் காசநோய் உள்ள அனைவரும் ஹெச்.ஐ.வி பரிசோதனையும், ஹெச்.ஐ.வி தொற்று உள்ள அனைவரும் காசநோய் (சளி) பரிசோதனையும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கர்ப்பிணிகளுக்கான தடுப்பு மருந்து
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், கருவுற்ற 14 வாரங்களில் இருந்து தாய்ப்பால் நிறுத்தும் வரை தாய்க்கு ஏ.ஆர்.டி (ART) தடுப்பு மருந்து வழங்கப்படுவதன் மூலம், பிறக்கும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2011 -ஆம் ஆண்டு முதல் பிறந்த குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அன்போடும் அரவணைப்போடும் பழகுங்கள்
ஹெச்.ஐ.வி தொற்று உள்ளோரை மற்றவர்கள் அன்போடும், அரவணைப்போடும் சக மனிதர்களாகக் கருதிப் பழக வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட முன்வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். நல்ல கட்டுப்பாடான வாழ்வை ஏற்படுத்திக் கொண்டு, ஹெச்.ஐ.வி தொற்று இல்லாத புதிய சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதார துறை இணை இயக்குநர் மரு. பானுமதி, சுகாதார துறை துணை இயக்குநர் மரு. அஜீத் பிரபுக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்கு) மணிக்கண்ணன் மற்றும் (சட்டம்) அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















