Coffee | காலை எழுந்ததும் காபி குடித்தால் இத்தனை பிரச்சனைகளா? இது தெரியாமப்போச்சே!
இதைவிட முக்கியமான விசயம், வெறும் வயிற்றில் காபி குடிப்பது, உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகும் என மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
‛எனக்கு காலையில் காபி குடித்தால் தான் விடியும்... காபி பார்த்து தான் என் காலையே விடியும்....’ என காலையில் காபியோடு எழுந்திருப்பவர்களையும், ‛பேட் காபி’ என படுக்கையோடு காபியை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களும் இங்கு ஏராளம். இன்னும் சொல்ல வேண்டுமானால், காலையில் ஒரு கப் காபியும், ஒரு பேப்பரும் இருந்தால் தான் என்னால் கழிப்பறைக்கே செல்ல முடியும் என்று கர்ஜிப்பவர்களும், அதை பெருமை பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிறந்த பானம் டீயா, காபியா என்கிற விவாதம் ஒருபுறமிக்க, அதில் காபி ‛கப்’ வாங்கி கதையை கூட நாம் கேட்டிருக்கிறோம். இங்கே நாம் பார்க்கப் போது, டீயா, காபியா என்கிற விவாதமல்ல... காலையில் காபி சரியா என்பதை பற்றியது மட்டுமே. இப்போது காலைக்கு போவோம்... அதற்கு முன் நம் உடலில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பற்றி அறிந்து கொள்வோம். நாம் ஏதாவது ஒரு உணவை பற்றி சிந்தித்தாலோ, புசித்தாலோ, ஒரு உணவின் வாசனையை நுகர்ந்தாலோ நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்துவிடும். இது வழக்கமான ஒன்று. ஆனால், நாம் காலையில் எழும் போது, அந்த நாளை புதுமையாக, புத்துணர்வுடன் தொடங்குவதாக நினைத்து கையில் காபியோடு எழுகிறோம்.
நாம் இரவில் உண்டு, காலை வரை நமது வயிற்றை காலியாக வைத்திருப்போம். காய்ந்து கிடக்கும் வயிற்றில் நாம் காபியை ஊற்றும் போது, அது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்யும். அது, வயிற்றின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும் என்கிறது அறிவியல். குறிப்பாக வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். போதாக்குறைக்கு வயிறு உப்புசம் போன்றவையும் வரலாம் என எச்சரிக்கிறார்கள். இது ஆரம்ப கட்டம்; பின்நாளில் பிரச்சனை பெரிதாகலாம் என்கிற எச்சரிக்கையும் உண்டு.
சிலருக்கு அடிப்படையிலேயே வயிற்றியில் சில பிரச்சனைகள் இருக்கும். அசிடிட்டி, மலப்பிரச்சனை, அல்சர் போன்றவை. அவர்கள் காலையில் காபியை தொட்டுக் கூட பார்க்க கூடாது. காபி கொட்டையில் உள்ள காஃபின் என்கிற பொருளும், அமிலமும் சேர்ந்து சிறுகுடலை கடுமையாக பாதிக்குமாம். 24 மணி நேர சுழற்சிக்கு உட்பட்ட நம் உடலில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட வேலையை, குறிப்பிட்ட பாகங்கள் மேற்கொள்ளும். ஹார்மோன்கள் தான் அவற்றை ஒழுங்குபடுத்தும். அதில் கார்டிசால் என்கிற ஹார்மோன் தான் நம்மை எப்போதும் எச்சரிக்கையாகவும், விழிப்போடும் வைத்திருக்கும்.
நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அந்த ஹார்மோன் உச்சத்தில் இருக்கும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை உச்சகட்ட நிலையில் இந்த ஹார்மோன் பணியாற்றும். அந்த மூன்று மணி நேரத்தில் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரம், அதன் முதல் காலம். அந்த நேரத்தில் காபி குடிப்பது கார்டிசால் செயல்பாட்டை சீரழிக்கும். தொடரும் போது, அந்த ஹார்மோனே நம்மிடம் இருந்து அழிந்துவிடும். இதனால் உடல்நிலை பல கோளாறுகளை சந்திக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், சில ஆய்வுகள் காலையில் காபி அருந்துவது குறித்து, நிறைய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அதன் படி காலையில் காபி குடித்தால், பிற்பகலில் உடல் வறட்சியை சந்திக்கும், உடலில் இருந்து வெளியேறும் நீரில் அளவை பாதிக்கும் என்றெல்லாம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்கிற எச்சரிக்கையும் கூறப்பட்டுள்ளது.
இதைவிட முக்கியமான விசயம், வெறும் வயிற்றில் காபி குடிப்பது, உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகும் என மருத்துவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். சக்கரை நோய், இதய நோய்களின் துவக்கமே ரத்த அழுத்தம் தானே. எனவே காலை காபியிடமிருந்து எச்சரிக்கையாக இருப்போம். அதற்காக காபியை தூக்கி வீசுங்கள் என்று பொருள் இல்லை. காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, 10 மணியிலிருந்து 11 மணிக்குள் காபி குடிக்கலாம் என்கிற மற்றொரு ஆய்வு. அதை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் வரும் வழக்கமான காட்சியான , காஃபி ஷாப் போங்க, பகலில் பருகுங்கள்... யார் கேட்கப் போறா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )