`கோவிஷீல்ட் இரண்டு டோஸ்களுக்கு இடையில் 84 நாள்கள் இடைவெளி ஏன்?’ - மத்திய அரசிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி!
கேரளா உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான 84 நாட்கள் கால இடைவெளியின் காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளா உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான 84 நாட்கள் கால இடைவெளியின் காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் மத்திய அரசிடம் இந்தக் கேள்வியை, கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது எழுப்பியுள்ளார். கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்று அதற்கான அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி சுரேஷ் குமார், இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை நீட்டிப்பது அதன் வீரியத்தை அதிகமாக்கும் என்றால், தான் 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்காக வருந்துவதாகக் கூறியுள்ளார்.
இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிப்பதற்கு காரணம் மருந்து தட்டுப்பாடா, மருந்தின் வீரியத்தை அதிகரிப்பதற்காகவா என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் நீதிபதி சுரேஷ் குமார். மருந்து தட்டுப்பாடு தான் காரணம் எனில், கிடெக்ஸ் நிறுவனம் அடுத்த 84 நாட்கள் வரை காத்திருக்காமல், இரண்டாவது டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் மருந்தின் வீரியம் அதிகரிக்கும் எனில், அதுகுறித்த அறிவியல்பூர்வமான நிரூபணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த மனு மீது பதில் தெரிவிப்பதற்காக, ஆகஸ்ட் 26 வரை அவகாசம் கேட்டுள்ளார். நீதிமன்றமும் அவகாசம் அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 அன்று, உயர் நீதிமன்றம் கேரள மாநில அரசிடம் கோவிஷீல்ட் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 84 நாள்கள் கழித்த பிறகே, இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுவதன் காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், மத்திய அரசிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸுக்கும், இரண்டாம் டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை 4 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்கள் என உயர்த்தி அறிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
கேரள அரசுத் தரப்பில் இருந்து, மத்திய அரசு பிறப்பிக்கும் விதிமுறைகளின் கீழ் கோவிட் தடுப்பூசிகள் கையாளப்படுவதாகக் கூறியது. நீதிமன்றத்தின் கேள்விக்கான பதிலைத் தெரிவிப்பதற்காக, மத்திய அரசுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது. கிடெக்ஸ் நிறுவனம் ஏறத்தாழ 5 ஆயிரம் ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், தற்போதைய விதிமுறைகளால் அடுத்த டோஸ் ஊசியை செலுத்த முடியவில்லை எனவும் வாதாடியுள்ளது.