18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்றுமுதல் இலவச தடுப்பூசி; இனி CoWin App முன்பதிவு தேவையில்லை..!
நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் நடைமுறை அமலாகவுள்ள நிலையில், இதற்கு Cowin App முன்பதிவு செய்ய கட்டாயமில்லை என அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய கொள்கையின் படி இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள் ஆன்சைட் பதிவு (onsite registration) வசதியை வழங்கும் என்பதால், கோவின் இணையத்தில் முன்பதிவு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரக்கூடிய நிலையில் தான், கொரோனா தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமையும் என்பதால் முதற்கட்டமாக நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து 18-44 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பதிவினை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் கோவின் ஆப் மற்றும் ஆரோக்கிய செயலியினைப்பயன்படுத்தி தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவினை மக்கள் மேற்கொண்டனர். இதனையடுத்து மே1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசி முறையாக கிடைக்காமல் மாநில அரசுகள் தடுமாறினர். இதோடு நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகளவில் எழுந்தது. குறிப்பாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை முறையாக பெற முடியவில்லை என்று மாநில அரசுகள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக முந்தைய கொரோனா தடுப்பூசிக்கொள்கையின் கீழ், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்குவதற்காக 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கியது. இதோடு 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்க மாநில அரசுகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்க வேண்டியிருந்தது
இந்நிலையில் தான், உச்சநீதிமன்றம், உலகில் பிற நாடுகள் கொரோனா தடுப்பூசி மருந்தினை கொள்முதல் செய்து அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கும்போது ஏன் இந்தியாவில் மட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியது. மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விலைக்கொள்கை என்பது தன்னிச்சையாக மற்றும் பகுத்தறிவில்லாமல் இருப்பதாகவும் மத்திய அரசினைக்குற்றம் சாட்டியது. இதன் காரணமாக எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து தான் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகள் இன்று முதல் ( ஜூன் 21 ) நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது எனவும் இதற்கு கோவின் இணையத்தின் முன் பதிவு கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் புதிய கொள்கையின் படி,
- மத்திய அரசு மருந்தக நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தினை அதனிடம் இருந்து வாங்கிக்கொள்ளும். அடுத்ததாக 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு விநியோகிக்கும். எனவே இனிமேல் சந்தைகளில் இருந்து மாநிலங்கள் தடுப்பூசி கொள்முதலில் ஈடுபடாது.
- இதனையடுத்து மீதமுள்ள 25 சதவீதத்தினை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொண்டு, அங்கு வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் அதிகளவில் கட்டணங்களை வசூலிப்பதாக எழுந்த புகாரினையடுத்து, அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களுக்கு ரூ.150 தவிர அதிகம் வசூலிக்க கூடாது என அரசு எச்சரித்துள்ளது.
- குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டிற்கு ரூ.780, கோவாக்சினுக்கு ரூ.1410 மற்றும் ஸ்பூட்னிக்கிற்கு ரூ.1145 என ஒரு டோசிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் மத்திய அரசின் இந்த புதிய கொள்கையின் படி, மக்கள் தொகை , நோய் அதிகரிப்பு போன்றவற்றை கருத்தில்கொண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் விரைவில் நோய் தொற்று பாதிப்பிலிருந்து காக்கவும், தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
எனவே இன்று முதல், அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள் ஆன்சைட் பதிவு (onside registration) வசதியை வழங்கும் என்பதால், கோவின் இணையத்தில் முன்பதிவு தேவையில்லை என அறிவித்துள்ளது. மேலும் புதிய தடுப்பூசி கொள்கையின் கீழ், எந்த வகையிலும் மாற்றம் செய்ய முடியாத மின்னணு வவுச்சர்களை (E- voucher) கொண்டுள்ளது. மேலும் தனியார் தடுப்பூசி மையங்களில், பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளிக்கும். மேலும் இந்த voucher-களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது.
இதோடு கொரோனா தடுப்பூசிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறைக்குவருவதால், மே மாதத்தில் 7.5 கோடி டோஸிலிருந்து 12 கோடி டோஸ் ஜூன் இறுதிக்குள் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.