அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? முழு விவரம்..
கொரோனா தொற்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உயர்மட்ட மருத்துவ அமைப்பு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா வைரஸிற்கான கட்டுப்பாட்டு உத்திகளை அமல்படுத்தும் உயர்மட்ட மருத்துவ அமைப்பு இந்த சூழ்நிலையை கையாள்வது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தினசரி பாதிப்பு விகிதம் 2.08%, வாராந்திர பாதிப்பு விகிதம் 0.86% ஆகும்.
இந்தியாவில் தற்போது 6,350 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.8 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 479 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,59,182 பேர் ஆகும். இதுவரை மொத்தம் 92.03 கோடி பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,225 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று, நாடு முழுவதும் 1,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களில் ஏற்படும் அதிகபட்ச பாதிப்பாகும் என கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 6,2022 அன்று இந்தியாவில் கடைசியாக அதிகபட்சம் 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. அதில்"பாக்டீரியா தொற்றுக்கான அறிகுறி இல்லாவிட்டால் நுண்ணுயிர் எதிர்ப்புகளைப் (anti bacteria) பயன்படுத்தக் கூடாது. பிற நோய்த்தொற்றுகளுடன் கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட வேண்டும். சிஸ்டமிக் கார்டிகோஸ்டீராய்டுகள் லேசான நோய் அறிகுறியில் குறிப்பிடப்படுவதில்லை" என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.
தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மூன்று மாநிலங்கள் உடன் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு முறையான பரிசோதனை செய்யபட்டு கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 73 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 363 ஆக உள்ளது.
மேலும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,246 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )