Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
ஏவுகணைத் தாக்குதலின்போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பதுங்கு குழிக்கு விரைந்ததாக வீடியோ வெளியானது. அதில், ‘’ஈரானியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், ஓடிச் செல்லும் தருணங்கள்’’ என்று இருந்தது.
இஸ்ரேலின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில், செய்தி கேட்டு இஸ்ரேல் பிரதமர் பதுங்கு குழிக்கு ஓடிச் சென்றார் என்று வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன? பார்க்கலாம்.
மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாகவே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களான இஸ்மாயில் ஹனி, ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்டோரை இஸ்ரேல் படுகொலை செய்தது.
ஈரான் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னெச்சரிக்கை செய்த நிலையில், இஸ்ரேல் தனது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லப் பணித்தது.
இந்தத் தாக்குதலில் பெரிய அளவில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் கூறி வரும் நிலையில், வைத்த குறி தப்பவில்லை என்று ஈரான் மார்தட்டி வருகிறது.
பதுங்கு குழிக்கு விரைந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு?
இந்த நிலையில் ஏவுகணைத் தாக்குதலின்போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பதுங்கு குழிக்கு விரைந்ததாக வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், ‘’ஈரானியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஓடிச் செல்லும் தருணங்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்தது.
இன்னொரு வீடியோவில், தயவுசெய்து யாராவது , பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறைந்துகொள்ள இடம் தாருங்கள். பாவட்டப்பட்ட அவரால் ஓடக் கூட முடியவில்லை. கடைசியில் பதுங்கு குழிக்குள் ஒளிந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் பாருங்கள், தனது நாட்டு மக்களைக் கைவிட்டு விட்டார் என்று கூறப்பட்டது.
3 ஆண்டுக்கு முந்தைய வீடியோ
வீடியோவின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்பட்ட நிலையில், 3 வருடங்களுக்கு முந்தைய பழைய வீடியோ என்று தெரிய வந்தது.
இஸ்ரேல் நாடாளுமன்றம் செல்லத் தாமதமாகி விட்ட நிலையில், நெஸ்ஸட் காரிடாரில் பெஞ்சமின் நெதன்யாகு விரைந்த காட்சிகளே அவை என்று தெரிய வந்துள்ளது.