என் கேரியர் தொடங்கியது கேப்டன் படத்தில் தான்.. யுவன் சங்கர் ராஜா உருக்கமான பேச்சு!
சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார் என்று யுவன் பேசியிருந்தார்.

இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் பேசினார்
கொம்பு சீவி இசை வெளியீட்டு விழா
சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்து முடிந்தது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
யுவன் பேச்சு
விழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், '' நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.
”யார் ஹீரோ என கேட்டேன்”
இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன், சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு. சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன்.
இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.
கேப்டனுடன் தொடங்கிய பயணம்
கேப்டன் சார் நடித்த 'தென்னவன்' படத்திற்கு நான் இசையமைத்தேன். 'அரவிந்தன்' படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த 'அலெக்சாண்டர்' படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் 'அலெக்ஸாண்டர்' படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,'' என்றார்.






















