(Source: ECI/ABP News/ABP Majha)
Year Ender 2022: பீஸ்ட் முதல் காந்தாரா வரை; 2022 இந்திய சினிமா சந்தித்த சர்ச்சைகள்! - முழு விபரம் உள்ளே!
Year Ender 2022 : பீஸ்ட் பேன் முதல் பாலிவுட் பாய்காட் வரை அனைத்து சர்சைகளையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து, அதுவே அடங்கியது. அதன் பின்னர், சில வருடங்கள் கழித்து இந்த ஆண்டில் பல படங்கள் திரையரங்குகளில் ரிலீசானது. அத்துடன் திரையரங்குகளில் ஓடிய அப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் பழக்கம் புழக்கத்தில் வந்தது.
அதே போல படங்களை ப்ரோமோட் செய்வதற்காகவும், அந்த படத்தை ஃப்ளாப் செய்வதற்காகவும் சர்ச்சைகளை கிளப்பி விடும் புது யுக்தியும் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில், இந்த வருடத்தில் பீஸ்ட்க்கு வந்த தடை முதல் பாலிவுட் பாய்காட் வரையிலான அனைத்து சர்சைகளையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வணங்கான்
சூர்யா மற்றும் பாலா கூட்டணியில், வணங்கான் படம் உருவாகும் என்ற தகவல் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின், இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி ஊர் எங்கும் பரவியது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என இருவருமே தெரிவித்தனர். இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் வணங்கான் படத்தை விட்டு சூர்யா விலகியுள்ளதாக இயக்குநர் பாலா பத்திரிக்கையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருப்பினும் வணங்கான் பட வேலைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
லவ் டுடே
கோமாளி இயக்குநர், லவ் டுடே படம் மூலமாக கதாநாயகனாக கால்தடம் பதித்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆண்களால் கொண்டாடப்பட்ட இப்படத்தை, பார்த்த சில பட விமர்சகர்கள், “இது ஆண் ஆதிக்க சிந்தனையை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்று கூறினர். அதன் பின், பிரதீப் ரங்கநாதனும் யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜயை பற்றி முன்னுக்கு பின்னாக இருக்கும் முரண்பட்ட கருத்துக்களை சொல்லி, பெரும் பிரச்னையில் சிக்கினார். அதன் விளைவாக, முகநூல் பக்கத்திலிருந்தும் நீங்கினார். இதையெல்லாம் தாண்டி தெலுங்கிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
காந்தாரா
தாய் குடம் என்ற இசைக்குழுவினரின் “நவரசம்” பாடலை, காந்தாரா படக்குழுவினர் காப்பி அடித்து “வராஹ ரூபம்” பாடலை இசையமைத்துள்ளனர் என்பது தொடர்பான வழக்கு, நீதிமன்றம் வரை சென்றது. பின்னர், ரிஷப் ஷெட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆர் ஆர் ஆர்
பிரமாண்டமான காட்சிகள், சூப்பர் இசை, நாட்டு குத்து என கலக்கிய ஆர் ஆர் ஆர் படத்தின் இறுதி காட்சியில் ராம் சரண், ராமர் வேடத்தில் காண்பிக்கப்பட்டு இருப்பார். இதனால், இந்துத்துவா கொள்ளைகையை இப்படம் மூலம் உட்புகுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. இருப்பினும் இப்படம் உலகளவில் கோடிக்கணக்கான வசூலையும், பல விருதுகளையும் பெற்று வருகிறது
லைகர்
பாய்காட் பாலிவுட் என்ற விஷயத்திற்கு எதிராக குரல் கொடுத்த விஜய் தேவரகொண்டாவினால், இப்படம் பிரச்னையில் சிக்கியது. இப்படமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆதி புருஷ்
இந்த வருடத்தில் ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியானது. ஒருபக்கம் இதை பொம்மை படம் என்று சிலர் கிண்டல் செய்தனர். மறுபக்கம், இப்படம் ஹிந்து மக்களின் நம்பிக்கையும் , இதிகாசங்களையும் இழிவு படுத்துகிறது என்று கூறினர். அத்துடன், இராவணன் மற்றும் ஹனுமன் ஆகிய இருகதாபாத்திரமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
இந்தாண்டில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் , சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியது.
கோவாவில் சர்வதேச திரைப்படவிழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் திரையிடப்பட்டது. அதை பார்த்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நடாவ் லாபிட், “இது பிரச்சார நோக்கத்துடன் எடுக்கப்பட்ட கேவலமான படம்” என்று சொன்னார். இதனால் பெரும் பிரச்னை எழும்பியது. மற்றவர்கள் அவரை மன்னிப்பு கேளுங்கள் என்று சொன்னதற்கு, நீங்கள் மத்த நடுவர்களிடம் கேளுங்கள் என்றார். பின்னர் மற்ற நடுவர்களும், நடாவ் லாபிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிரம்மாஸ்திரா
அப்படத்தில் காலணியுடன், ஹீரோ மற்றும் ஹீரோயின் கோயில் உள்ளே செல்கின்ற காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும் . இதன் வாயிலாக, பாலிவுட் இந்து மதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்துவதையே வேலையாக வைத்துள்ளது என்ற கருத்து முன்வைக்கப்ட்டது. அதன் பின், இந்த படத்தை வீழ்த்த பல முயற்சிகள் எடுக்கபட்டது. ஆனால், இப்படம் நல்ல வசூலை எட்டியது.
லால் சிங் சத்தா
ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியும், சீக்கிய படுகொலை, ராஜீவ் காந்தி படுகொலை என இந்தியாவில் நடந்த பல வரலாற்று பக்கங்களை உள்வாங்கியும் படமாக அவதாரம் எடுத்த லால் சிங் சத்தா பாய்காட் பாலிவுட் என்ற பிரசாரத்தில் சிக்கி, பொருளாதார ரீதியாக ப்ளாப் அடைந்தது.
காளி
இயக்குநர் லீலா மணிமேகலையின், காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரில், LGBT சமூகத்தினரின் கொடியின் முன் இந்து கடவுளான காளி சிகரெட் பிடிப்பது போல அமைக்கபட்ட போஸ்டரினால் சர்ச்சை கிளம்பியது. இந்து மக்களின் கடவுளை இழிவு படுத்து செயல் இது என்று தெரிவிக்கப்பட்டது.
பீஸ்ட்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய இப்படம், மக்களின் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.மற்றொரு பக்கம், இதன் ட்ரெய்லரை பார்த்த அரபு நாடுகள் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளது என்ற கருத்தை முன்வைத்து அவர்களின் நாடுகளில் தடை செய்தது.