(Source: ECI/ABP News/ABP Majha)
‛இந்து விரோத அரசியல் பேசினால் சென்னையில் வீடு வாங்கலாம்’ -எழுத்தாளர் ஜெயமோகன் குற்றச்சாட்டு!
Writer Jayamohan: ’’சைவம், இந்து மதம் அல்ல என்பதை சொல்வதற்கு இந்த 5 ஆண்டில் மட்டும் குறைந்தது 100 கோடி ரூபாய் தமிழகம் வந்திருக்கிறது’’ -ஜெயமோகன்.
ராஜராஜ சோழன் இந்துவே இல்லை என்கிற வாதத்தை இயக்குனர் வெற்றிமாறன் முன் வைத்த நிலையில், அதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியான பின் வெளிவந்திருக்கும் இந்த விவாதம், இருதரப்பினரிடையே கடும் கருத்துப் போராக மாறியிருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் வசனகர்த்தாவும், கதாசிரியருமான ஜெயமோகன், இந்து மதம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றை, பாஜகவினர் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோவில், ஜெயமோகன் பேசியது...
‛‛நான் வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறேன்... மதமாற்ற சக்திகள்... கிறிஸ்தவ, இஸ்லாமிய மதமாற்ற சக்திகளிடம் நேரடியாக பணம் பெற்றுக் கொண்டு பேசுகிறார்கள் பெரும்பான்மையினர். எப்படி பணம் கொடுக்கிறார்கள், எங்கு பணம் கொடுக்கிறார்கள். யார் யார் எல்லாம் பணம் பெற்றிருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
இந்து விரோத அரசியலை நேரடியாக மேடையில் கூறினீர்கள் என்றால், சென்னையில் உங்களால் வீடு வாங்க முடியும். ஏழையாக இருக்க கூடிய இந்து எதிர்ப்பாளர் ஒருவன் கூட, தமிழ் நாட்டில் இல்லை. எந்த இந்து துறவியும் அந்த அளவு பணத்தோடு இருக்க முடியாது.
100% உண்மை. https://t.co/OZHs7YNAK1
— H Raja (@HRajaBJP) October 7, 2022
சென்னையில் வீடு வாங்கியிருக்காங்க; கார் வாங்கியிருக்காங்க. ஒரே தகுதி, எதுவுமே தெரியாமல் இந்து மதத்தை மேடையில் கீழே இறக்குவாங்க. இன்றைக்கு இந்துக்கள் இதை கண்டு திரண்டு வரும் போது, இந்து மதத்திற்குள் இருந்து கொண்டு இந்து மதத்திற்கு பிளவை ஏற்படுத்துவதற்கு பணம் கோடி கணக்கில் கொடுக்கப்படுகிறது.
சைவம், இந்து மதம் அல்ல என்பதை சொல்வதற்கு இந்த 5 ஆண்டில் மட்டும் குறைந்தது 100 கோடி ரூபாய் தமிழகம் வந்திருக்கிறது. சைவம் இந்து மதம் இல்லை என்று சொல்ல. இதை சொல்லும் அத்தனை பேரும் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் என்னிடம் சொல்கிறார், நான் என்னங்க பண்ணுவேன் எனக்கு கடன் உள்ளது; 70 லட்சம் ரூபாய் கடன் உள்ளது அதனால் சொல்கிறேன் என்கிறார்.
அந்த ஆட்களை நான் குற்றம்சாட்டுகிறேன். அவர்களை நான் வெறுக்கவில்லை; அருவெறுக்கிறேன்.’’
என்று, அந்த வீடியோவில் எழுத்தாளரும், பிரபல கதையாசிரியருமான ஜெயமோகன் பேசியுள்ளார். இந்த வீடியோவை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே பொன்னியின் செல்வனம் படத்திலிருந்து தான் இந்த விவாதம் புறப்பட்டது. தற்போது, அந்த படத்தின் வசனகார்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், சைவத்தை இந்து மதம் இல்லை என்று கூற பெருந்தொகை வந்திருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்