'சோளகர் தொட்டி’ நாவலின் காட்சிகள் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது - எழுத்தாளர் ச.பாலமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
"ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை"
!['சோளகர் தொட்டி’ நாவலின் காட்சிகள் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது - எழுத்தாளர் ச.பாலமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு Writer Balamurugan has accused that the scenes of the novel 'solakar thotti' have been used in the movie Viduthalai 'சோளகர் தொட்டி’ நாவலின் காட்சிகள் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது - எழுத்தாளர் ச.பாலமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/96f29472a55ef7e9b2f2ba4484d465a81680263226821571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த மார்ச்-31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விடுதலை திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் ச.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகங்களில் இடம்பெற்ற வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பழங்குடியின மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ச.பாலமுருகன், “வெற்றி மாறனின் விடுதலை திரைப்படத்தின் முன் வெளியீட்டு காட்சிகள் கடந்த மாதம் வந்த போது நண்பர் ஒருவர் வனம் சார்ந்த பின்னனி மற்றும் ஒரு காவலர் பார்வையில் கதை நகர்தல் என அறிந்து, சோளகர் தொட்டி நாவலின் காட்சிகள் இருக்குமோ? என ஐயம் தெரிவித்தார். ஆனால் நான் வெற்றி மாறன் என்ற இயக்குநரை நேரில் அறிந்ததில்லை என்ற போதும், தொடர்ந்து நாவல்களின் மைய கதையை திரைப்படமாக்கும் இயக்குநராகவும், இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதாலும், மேலும் அந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டது என இருந்ததாலும் சில கடந்து போகும் காட்சிகளை தவிர்த்து சோளகர் தொட்டி தாக்கம் இருக்காது என உறுதியாக கருதினேன்.
திரைப்படம் வெளிவந்த தினத்திலிருந்து பல்வேறு நண்பர்கள் சோளகர் தொட்டி நாவலின் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர். நான் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது. திரைப்படத்தின் மையக் கருவும், கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின்புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது.
குறிப்பாக இத்திரைப்படத்தின் துவக்க காட்சியான இரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம் மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம். அங்கு பணி புரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர். சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர் சுபாஷ். கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு உயிருடன் ஜீப்பில் கொண்டு போய் அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும்போது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலீஸ்காரன். இந்த பாத்திரத்தின் நீட்சி மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமாக இத்திரைப்படத்தின் நாயகன் நிற்கின்றான்.
திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப்பெண்ணின் குழந்தையை கொன்று விடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்கு பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களை கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன. சோளகர் தொட்டி என்ற நாவலின் காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்படுத்தியதாலும் நாவலின் ஆன்மா வேறானது.
அது நியாயத்தின் குரலாகவும், மனிதநேயத்தின் நியதிகளை கோரிய படைப்பாகவும் இருக்கின்றது. அது ஒரு தொடர் செயல்பாட்டின் வெளிப்பாடு. வெகு காலம் அம் மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம்.
ஆனால் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர். அவர் ஒரு படைப்பை அணுகும்போது அறிவு நாணயத்தோடு அனுகி இருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை. மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைத்தன்மையோடு உலகளாவிய அளவில் மனித நேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)