விஜய் இல்லாத வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்..மற்ற மொழியில் இருந்து நடிகர்களை இறக்கும் இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க போதுமான நட்சத்திர நடிகர்கள் இல்லாத காரணத்தினால் மற்ற மொழி நடிகர்களுக்கு கதை சொல்லி வருகிறார்கள் முன்னணி இயக்குநர்கள்

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய். கமல்ஹாசன் , அஜித் , சூர்யா , விக்ரம் , சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து பல நடிகர்கள் இருந்தாலும் ரஜினி மற்றும் விஜய் படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெறக் கூடியவை. தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் எச் வினோத் இயக்கும் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் சினிமாவை முழுவதுமாக விட்டு அரசியலுக்கு வர இருக்கிறார் விஜய்.
தமிழ் சினிமாவில் வெற்றிடம்
விஜய் சினிமாவை விட்டு விலகுவது தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மற்ற மொழிப்படங்கள் 500 கோடி 1000 கோடி என வசூல் ஈட்டி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இதனை சாத்தியப்படுத்தக் கூடிய இரண்டே நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய். வயது காரணமாக ரஜினி இனி வரக்கூடிய காலங்களில் குறைவாகவே படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் விஜயும் சினிமாவை விட்டு விலகுவதால் தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்ற மொழி நடிகர்களை தேடி செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
மற்ற மொழி நடிகர்களுக்கு கதை சொல்லும் தமிழ் இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில் தற்போது அட்லீ , லோகேஷ் கனகராஜ் , நெல்சன் ஆகியவர்கள் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இதில் அட்லீ ஏற்கனவே இந்தியில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கிவரும் நெல்சன் அடுத்தபடியாக ஜூனியர் எண்டிஆர் படத்தை இயக்க இருக்கிறார். மீதமிருக்கும் லோகேஷ் கனகராஜ் எதிர்காலத்தில் பெரிய ஸ்டார்களை தேடி பிற மொழி நடிகர்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திறமையுள்ள பல நடிகர்கள் இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் மூலம் வசூல் குவிக்கும் படங்களை கொடுப்பது என்பது இனி கொஞ்சம் சவாலானதாக தான் இருக்கும்.





















