மேலும் அறிய
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
TVK VIJAY: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில் ஈரோட்டில் 18ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு போலீசார் 43 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

TVK Vijay Erode Meeting
Source : Youtube
ஈரோட்டில் விஜய் கூட்டம்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்ட நிலையில், தற்போது 43 நிபந்தனைகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 18.12.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை நடைபெற 43 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
போலீஸ் விதித்த 43 நிபந்தனைகள்
- தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க சீரான போக்குவரத்தினை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நிற்பதை தவிர்ப்பதற்காக சர்வீஸ் சாலையை ஒட்டி வடபுறம் பார்வை தடுப்புகள் அமைக்கப்படவேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் இருந்து வட புறம் சுமார் 250 அடி தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் (Barriecade) அமைக்கப்பட வேண்டும்.
- பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும். பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நிழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும் வெளியேற்றப்படும் போதும் தள்ளுமுள்ளு இல்லாமல் இடைவெளி விட்டு வரிசையாக மட்டுமே அனுப்பப்படவேண்டும்.
- பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை ஒவ்வொரு Box-லும் 80% மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஒரு Box-ல் 500 பேர் நிற்க முடியும் என்றால் 400 பேர் மட்டுமே Box-க்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
- நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும்.
- நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.
- நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் மருத்துவ குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
- ஏதேனும் மருத்துவ அவசர நிலை ஏற்படும் நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அருகாமையில் எத்தனை மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
- அவசர நிலைகளில் தியணைப்பு மற்றும் ஆம்புலன்ளஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும்.
- நிகழ்ச்சிக்கு எவ்வளவு CCTV கேமராக்கள் மற்றும் PA SYSTEM, LED திரைகள் அமைக்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும், போதுமான CCTV கேமராக்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்யவேண்டும். Drone Camera Operator பற்றிய விபரங்கள் மற்றும் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்த்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதையும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள். முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, முன்னரே தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும்.
- பட்டாசு, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துவர அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். (பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை).
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலோ, முக்கிய நபர்கள் வரும் வழியிலோ மின்கம்பம், மரங்கள் உயரமான கட்டிடங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றின் மீது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏறி நிற்க கூடாது. அதை தாங்களே உறுதி செய்யவேண்டும்.
நிகழ்ச்சி நடத்தும் நேரம் சம்மந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்
- நிகழ்ச்சியானது 18.12.2025-ம் தேதி காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணிக்குள் கட்டாயம் முடிக்கப்படவேண்டும்.
- நிகழ்ச்சியானது காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணிக்கு முடிவடைவதால் கடுமையான வெயில் நேரம் என்பதால் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் கண்டிப்பாக மேற்கூரை அமைக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்களே பொறுப்பாவீர்கள்.
- தங்களின் கட்சியின் தலைவர் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை முன்பே தெரியப்படுத்தவேண்டும். அவர் பிரச்சார வாகனத்திற்கு எந்த வழியில் வருவார் என்ற விபரத்தை முன்பே தெரிவிக்கவேண்டும்.
நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு VIP வரும் Route சம்மந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்.
- VIP வாகனத்தை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட 10 வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் பின் தொடர்ந்து வரக்கூடாது.
- வரும் வழியில் எந்த இடத்திலும் வரவேற்பு, Road Show, ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
- நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வரவேண்டிய பாதை(Route) மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் (Parking)
- நிகழ்ச்சிக்கு சேலம் to கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள் சர்வீஸ் ரோடு வழியாக IRTT பாலத்தின் கீழ் வலது புறம் திரும்பி சீனாபுரம் வழியாக வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லவேண்டும்.
- நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் செல்ல போதுமான அறிவிப்பு பலகைகள் (flexes, direction boards) காவல் துறை கோரும் இடத்தில் வைக்கப்பட வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போதிய PA SYSTEM, அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவேண்டும். மேலும் தீயணைப்பு வாகனங்கள் (Fire service) நிறுத்தி வைக்கப்படவேண்டும்.
- நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மீறும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவான விதிமுறைகள்.
- பொது சொத்திற்கு ஏதும் சேதாரம் ஏற்படுத்தினால், நிகழ்ச்சியின் பொறுப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
- உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர்கள். கொடிகள் மற்றும் அலங்கார வளைவுகள் ஆகியவை அமைக்கப்படக்கூடாது.
- மேற்படி நடைமுறைகளை பின்பற்றுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எழுத்து மூலம் உறுதி மொழி பிரமாண பத்திரம்(affidavit) 16.12.2025-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். அதில், விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கக்கூடிய அமைப்பாளர்களின் பெயர் விபரங்கள். குறிப்பிட்டிருக்கவேண்டும்.
- நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிரச்சார நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பாவார்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















