(Source: ECI/ABP News/ABP Majha)
Por Thozhil: தீவிரவாதிகள், சைக்கோ கதாபாத்திர பெயர்கள்.. மத வெறுப்பு பரப்புரையா? தமிழ் சினிமாவே இது நியாயமா?
தமிழ் சினிமாக்களில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே தொடர்ந்து சைக்கோ கொலைகாரர்களாக காட்டிவருவது சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாக்களில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே, தொடர்ந்து சைக்கோ கொலைகாரர்களாக காட்டி வருவது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா எனும் ஊடகம்:
ஆரம்ப காலங்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சினிமா, தற்போது சமூகத்தில் நிலவும் அவலங்களை வெகுஜனங்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய ஊடகமாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் திரைப்படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும், வசனமும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, மெர்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களே உதாரணமாக உள்ளது.
முந்தைய காலங்களில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப பல பிற்போக்குத்தனமான கருத்துகள் படங்களில் இடம்பெற்று இருந்தன. ஆனால், காலத்திற்கு ஏற்ப தங்களை மறுஉருவாக்கம் செய்து கொண்டு சினிமா படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒவ்வொரு வசனத்தையும் கூட தீர ஆராய்ந்த பிறகே இயக்குனர்கள் எழுதி வருகின்றனர். அதேநேரம், பலர் சினிமாக்களை பயன்படுத்தி ஒருசார்பான கருத்துகளை திணிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் மீதான தவறான பிம்பம்:
இதற்கான சிறந்த உதாரணம் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் கதை ஒன்றே போதும். ஏனென்றால், தமிழ் சினிமாக்களை (பாலிவுட் உள்பட மற்ற திரையுலகங்களிலும்) பொறுத்துவரையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் இஸ்லாமியர்களாக தான் இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் இயக்குனர்களால் எந்தவொரு சரியான விளக்கத்தையும் கொடுக்க முடியாது.
ஆனாலும், பொத்தாம் பொதுவாக பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் தான் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது தான் அந்த மரபு மெல்ல மெல்ல சற்றே குறைந்து வருகிறது. ஆனால், அதற்கு இணையாக வேறு ஒரு புதிய மரபு தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளது.
சைக்கோ கொலைகாரன்:
தீவிரவாதிகள் கதையை எல்லாம் அடித்து துவைத்து முடித்துவிட்டு, தமிழ் சினிமா தற்போது எடுத்துள்ள கதைக்களம் சைக்கோ கொலைகாரன். அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெற்ற சினிமாக்களை எல்லாம் சற்றே திரும்பி பார்த்தால், அது எல்லாவற்றிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கும். ஆம், வில்லனாக வரும் அந்த சைக்கோ கொலைகாரன் ஒரு கிறித்துவர் என்பது தான்.
நீளும் பட்டியல்:
உதாரணமாக இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாப்பின் கதாபாத்திரத்தின் பெயர் மார்டின் ராய். ராட்சசன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் கிறிஸ்டோபர். நெற்றிக்கண் படத்தில் வில்லனாக வந்த அஜ்மலின் பெயர் ஜேம்ஸ். அண்மையில் வெளியான போர் தொழில் படத்தில் வந்த வில்லனின் பெயர் கென்னடி என பட்டியல் நீளும். சில படங்களில் கிறித்துவ அறக்கட்டளைகளில் படித்தவர்கள், விடுதிகளில் தங்கியிருந்தவர்களை கூட சைக்கோ கொலைகாரனாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
காரணம் என்ன?
அது ஏன் கிறித்துவர்கள் மட்டுமே என கேட்டால் அதற்கு என எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியாது. ஆனால், சரியான காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான சைக்கோ படங்கள் ஆங்கில படங்களில் தழுவலாக இருப்பதே ஆகும்.
கருத்து திணிப்பா?
மேற்கத்திய நாடுகளில் வேண்டுமானால் அது சாதரணமாக இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இது சாதாரண விஷயமாக கருத முடியாது. அதுவும் தற்போது நிலவும் சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சூழலில், குறிப்பிட்ட சமூகத்தினரை, மதத்தினரை தொடர்ந்து ஒரே மாதிரியான பிம்பத்தில் காட்சிப்படுத்துவது சமூகத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையலாம். குறிப்பிட்ட சமயத்தின் மீது ஒரு மோசமான எண்ணத்தை மற்ற சமயத்தினர் மத்தியில் உருவாக்கலாம்.
ஏதோ ஒன்று, இரண்டு முறை இப்படி அமைந்தால் தற்செயலாக அமைந்துள்ளது என கருதலாம். ஆனால், தொடர்ந்து சைக்கோ கொலைகாரர்களாக குறிப்பிட்ட மதத்தினரே காட்சிப்படுத்துவது, ஏதோ ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக திணிக்க முய்ற்சிக்கின்றனாரோ? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனவே எதிர்வரும் காலங்களில் தமிழ் சினிமா இயக்குனர்கள் மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு தங்களது கதாபாத்திரங்களை வடிவமைக்க வேண்டியது அவசியமாகும்.