சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்து ரஜினிக்கு கமல் கொடுத்த அறிவுரையே அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க மிகப்பெரிய உந்துதலாக இருந்தது

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் நட்பும் பல ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையில் இருவரும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவு செய்த ஒரு தருணத்தில், கமல்ஹாசன் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் இருவரின் நட்பை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ரஜினி கமல் கூட்டணி

ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, தப்பு தாளங்கள், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், நட்சத்திரம், தில்லு முல்லு, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம் என இருவரும் இணைந்து 18 படங்கள் வரை நடித்துள்ளார்கள்.
பிரிந்து சென்றது ஏன் ?
பின்னர் இருவரும் தனித்தனியாக பயணிக்க முடிவு செய்தனர். இதற்கு காரணம், இருவரது சம்பளத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்று கமல்ஹாசன் பழைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தனித்தனி பாதையில் பயணித்த பிறகு இருவரது வளர்ச்சியும் வேகமெடுத்தது.
சினிமாவை விட்டு விலக ரஜினி முடிவு
இந்த காலகட்டத்தில்தான் ஒருநாள் ரஜினிகாந்த், தான் சினிமாவை விட்டு விலகலாம் என கமல்ஹாசனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டதும் கமல்ஹாசன் அதிர்ச்சியடைந்தார். ரஜினிகாந்த் சினிமாவை விட்டு சென்றுவிட்டால், அடுத்ததாக தன்னையும் சினிமாவை விட்டு விலகச் சொல்லிவிடுவார்கள் என அவர் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
கமல் கொடுத்த அறிவுரை

“நீங்கள் சினிமாவை விட்டு போனால் அடுத்து என்னையும் போகச் சொல்வார்கள். என் வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள்” என கமல்ஹாசன் ரஜினியிடம் கூறினாராம். இருவரையும் வைத்து சினிமா உலகம் போட்டியை உருவாக்கிய நிலையில், அந்தப் போட்டியில் இருவருமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கமல் வலியுறுத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் பயணித்தார். அதன் பின்னர் அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். இருவரும் தனித்தனி பாதையில் பயணித்தாலும், ஒருவரது வெற்றியை மற்றொருவர் மனதார பாராட்டும் நட்பு இன்றளவும் தொடர்கிறது.
நெல்சன் இயக்கத்தில் மீண்டும்

கிட்டதட்ட 47 ஆண்டுகள் கழித்து ரஜினி மற்றும் கமல் இணைந்து மீண்டும் நடிக்கவுள்ளார்கள். நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதுதவிர்த்து கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் தற்போது தர்மன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















