TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆபாச பேச்சுக்களும், வக்கிரமான பேச்சுக்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடம் கவலையளிக்கத் தொடங்கியுள்ளது.

உலகில் வேறு எந்த இடத்திலும் பேச்சாற்றல் ஏற்படுத்தாத தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு தமிழக அரசியலின் வரலாறே சிறந்த உதாரணம் ஆகும்.
ஆபாச அரசியல்:
இலக்கிய தமிழ், இலக்கண தமிழ் என தமிழின் பல அழகியலை யதார்த்த முறையில் பேசி மக்களை தங்கள் கட்சிக்காக எந்தளவு வாக்கு அளிப்பதற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதோ, அதே அளவு ஆபாச வார்த்தைகளால் எதிர்க்கட்சியினரை அர்ச்சனை செய்வதற்கும் இந்த தாய்மொழி தமிழை பயன்படுத்தினர் என்பதும் வேதனைக்குரிய மறுக்க முடியாத உண்மை.
ஆபாச வார்த்தைகளால் அரசியல் கட்சிகள் மற்ற கட்சியினரை அவதூறு பாடுவது கடந்த காலம் முதலே இருந்தாலும் சமீபகாலமாக அது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆக்கப்பூர்வமான அரசியல் என்பது குறைந்து ஆபாச அரசியல் மிக அதிகளவில் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்பது சமூக வலைதளங்களில் வரும் காணொளிகள் மூலம் நாம் உணர முடியும்.
தனி மனித தாக்குதல்:
இளைஞர்களை வழிமுறைப்படுத்தவும், அவர்களை ஒழுக்கப்படுத்தவுமே அரசியல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இன்றைய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பேசும் பேச்சுக்கள் இளைய தலைமுறையினரை ஆபாச பாதையில் அழைத்துச் செல்வதற்கும், தனி மனித தாக்குதலை தூண்டுவதற்குமே மிகப்பெரிய அளவில் உந்து சக்தியாக உள்ளதோ என்ற அச்சம் உருவாகிறது.
தமிழ்நாட்டைப் பல முறை ஆட்சி செய்த திமுக, அதிமுக போன்ற மூத்த கட்சியிலும் அவ்வப்போது சில தலைவர்களும், நிர்வாகிகளும் ஆபாச வார்த்தைகளால் பொதுவெளியில் எதிர்க்கட்சியினரை தனி மனித தாக்குதலை நடத்தி வருகின்றனர். திமுக-வில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் பல ஆபாச பேச்சுக்கள் மேடைதோறும் தொடர்ந்தாலும் அவர் கட்சியில்தான் நீடித்து வருகிறார்.
அருவருப்பின் உச்சம்:
சமீபத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜய் பற்றி பேசிய பேச்சும் மிகவும் அருவருப்பானதாக அமைந்துள்ளது. ஆபாசமாக பேசும் அந்த கட்சியின் நிர்வாகிகள், தலைவர்களை அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டிக்கத் தவறுவதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவதும் அவர்களின் ஆபாச பேச்சை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
தவெக அரசியல் கட்சி உதயமான பிறகும், விஜய் தீவிர அரசியலை முன்னெடுக்கத் தொடங்கிய பிறகும் அவர் மீது மற்ற கட்சியினர் முன்வைக்கும் ஆபாச அர்ச்சனை தாக்குதல் முகம் சுளிக்க வைக்கும் அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதலை இப்போது ஒவ்வொரு கட்சியினரும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசி வருகின்றனர். இதை எந்த கட்சியினரும் விதிவிலக்கு இல்லாமல் இணையத்தில் செய்து வருகின்றனர்.
வதைக்கப்படும் பெண்கள்:
இவர்களின் ஆபாச அரசியல் தாக்குதல் பெண்களை குறிவைத்தே அரங்கேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்வது யார்? என்பதை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாக பெண்களே உள்ளனர். ஆட்சி மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும், சுயசார்பு பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கு இல்லாவிட்டால் நாடே சரிந்து விடும் என்பதே உண்மை.
அப்பேற்பட்ட பெண் சக்தியை தங்களது ஆபாச வார்த்தைகளால் மிகவும் அவதூறாக பேசும் அரசியல் தலைவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அந்தந்த கட்சியின் தலைவர்களின் கட்டாய கடமை ஆகும். ஆபாச அரசியல் ஒரு பக்கம் இருக்க, வன்ம அரசியல் தவெக வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
வன்ம அரசியல்:
வாக்களித்த மக்களை கேடு கெட்ட மக்கள், நல்ல சாவே வராது, தற்குறிகள் என மாறி, மாறி விமர்சித்து அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசி வருவது அவர்களின் ஆதிக்க மனப்பான்மையையும் அதிகார வெறியையுமே காட்டி வருகிறது.
இந்த ஆபாச அரசியலுக்கும், வன்ம அரசியலுக்கும் அந்தந்த கட்சித் தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் மக்கள் தொடர்ந்து தேர்தல்கள் மூலமாக நிரந்தரமாக அவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதே உண்மை.
ட்ரெண்டிங் செய்திகள்





















