Vishal on Bayilvan : அவருக்கு பதில் சொல்ல முடியாது... வீடியோ எடுத்தா மட்டும் போதுமா? மேடையில் டென்ஷனான ஹரி, விஷால்
Vishal on Bayilvan : 'ரத்னம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கொந்தளித்த நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனுக்கு அடுத்தபடியாக ஆக்ஷன் ஹீரோ என அழைக்கப்படுபவர் நடிகர் விஷால். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முரளி சர்மா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஹரி மற்றும் விஷாலுடன் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
புறக்கணிக்கப்பட்ட பயில்வான் :
அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி ஒன்று விஷாலை டென்ஷனாக்கியது. மலையாள திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள்தான் ஆனாலும் வெற்றி பெறவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
முதலில் பத்திரிகையாளர்களில் யார் அந்த கேள்வியை கேட்டது என தெரியாமல் தேடிய விஷாலுக்கு அது பயில்வான் ரங்கநாதன் என தெரிந்த பிறகு, அவரின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இந்த நிகழ்ச்சி இதுவரையில் ஆரோக்கியமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எந்த ஒரு குழப்பமும் வேண்டாம். நான் தனியாக பதில் அளித்து கொள்கிறேன் என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார் விஷால். அவரின் இந்த பதிலை யாருமே எதிர்பார்க்காததால் அங்கிருந்தவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
அரண்மனை 4 :
மேலும் ரத்னம் திரைப்படம் வெளியாக இருந்தே அதே நாளில்தான் சுந்தர்.சியின் அரண்மனை 4 படமும் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு விஷால் பதில் அளிக்கையில் "நான் தள்ளிவைக்க சொல்லி சத்தியமா சொல்லவே இல்லை. அதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் யார் வேறு ஒரு படம் வெளியாக கூடாது என சொல்வதற்கு. அது போன்ற பாவமான செயல் எல்லாம் நான் ஒரு போதும் செய்ததே இல்லை.
எனக்கு எல்லா படமும் நன்றாக ஓட வேண்டும். எல்லா தயாரிப்பாளர்களும் சம்பாதிக்க வேண்டும், எல்லா இயக்குநர்களும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். போட்டி இல்லாமல் சினிமா கிடையாது. மற்ற படங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் அது சாதனை. அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதற்கான காரணத்தை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என பதில் அளித்தார்.
கெட்ட வார்த்தை பயன்பாடு :
இயக்குநர் ஹரியிடம் உங்களின் படத்தில் பொதுவாக ஸ்பீட், வித்தியாசமான பேச்சு வழக்கு இவை எல்லாம் இருக்கும் ஆனால் ரத்னம் படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கே என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "வெளியில் கேட்காத வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்தவில்லையே. அந்த கதாபாத்திரம் ஒரு சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வார்களோ அதற்கு ஏற்றபடி யோசித்து தான் நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். இதை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் கிடையாது" என்றார்
”ரத்தம், வெறி, கொலை, குத்து இந்த வார்த்தைகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கு. ஒரு அநியாயம் நடக்கும் இடத்தில் மக்களால் வீடியோ மட்டும் தான் எடுக்க முடியும். ஆனால் அந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு அடித்து உதைக்க ஒரு ஆள் நமக்கு தேவை. அது நம்மால் செய்ய முடியாது. அதை நாம் படம் மூலமாக காட்டியுள்ளேன்" என கோபமாக பேசினார் இயக்குநர் ஹரி.