Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access Scooter: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் சூசுகியின் மின்சார ஸ்கூட்டரான இ-அக்செஸ் மாடலுக்கான விலை ரூ.1.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Suzuki e-Access Scooter: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் சூசுகியின் மின்சார ஸ்கூட்டரான இ-அக்செஸ் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
சுசூகி இ-அக்செஸ் ஸ்கூட்டர்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான, இ-அக்செஸ் மாடலுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நாடு முழுவதுமுள்ள நிறுவனத்தின் விற்பனை தளங்களில், இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவை விருப்பமுள்ளவர்கள் மேற்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இ-அக்செஸ் மாடலின் விலை ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வந்ததும் பயனர்கள், ஃப்ளிப்கார்ட் மூலமும் வாகனத்தை வாங்கலாம் என கூறப்படுகிறது.
சுசூகி இ-அக்செஸ் - வடிவமைப்பு
சுசூகி இ - தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இந்த ஸ்கூட்டரானது உருவாக்கப்பட்டுள்ளது. அப்மெர்ஷன், வைப்ரேஷன், அதிகப்படியான வெப்பநிலை மற்றும் பேட்டரி பாதுகாப்பு என சர்வதேச தரத்திலான பல்வேறு தீவிரமான சோதனைகளுக்கு இந்த வாகனம் உட்படுத்தப்பட்டுள்ளதாம். வாகனத்தின் ரேஞ்சை உயர்த்துவதற்காக சேஸ் ஆனது குறைந்த எடையில் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அடிப்படையில் எல்இடி விளக்குகள், டூயல் டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றுடன், 7 வருடங்கள் அல்லது 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான பராமரிப்பு தேவையற்ற பெல்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ப்ரீமியம் ஸ்விட்ச் கியர், வைப்ரேஷனை குறைக்க வலுவான கட்டமைப்பு மற்றும் இறுக்கமான பேனல் கேப்ஸ் ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன. முன்புறத்தில் டிஸ்க் ப்ரேக்கும், பின்புறத்தில் ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மொத்த எடை 122 கிலோவாக உள்ளது.
இ-அக்செஸ் - பேட்டரி விவரங்கள்
சுசூகி இ-அக்செஸ் ஸ்கூட்டரானது 3.072KWh லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. வழக்கமான வேதியியல் கலவையிலான பேட்டரிகளை காட்டிலும், புதிய பேட்டரிகள் நீண்ட காலம் உழைக்கு என சுசூகி தெரிவித்துள்ளது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 4.1KW எக்லெக்ட்ரிக் 15Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என கூறப்பட்டுள்ளது. ஈகோ, ரைட் ஏ மற்றும் ரைட் பி என மூன்று மோட்களை கொண்டுள்ளது. கூடுதலாக ரிவர்ஸ் மோட் மற்றும் ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங் வசதியும் உள்ளது. குறைந்த பேட்டரி சதவிகிதத்தில் கூட செயல்பாட்டில் எந்த குறையும் இருக்காது என உறுதியளித்துள்ளது. பாதுகாப்பிற்காக, சேஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அலுமினியம் உறைக்குள் இந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இ-அக்செஸ் - ஸ்பீட், சார்ஜிங் விவரங்கள்
சுசூகியின் இ-அக்செஸ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 71 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் பயன்படுத்துவதற்கு ஏதுவான 240 W சார்ஜர் மூலம், இந்த ஸ்கூட்டர் நான்கரை மணி நேரத்தில் பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதத்தை எட்டுமாம். முழுமையாக சார் ஏற 6 மணி நேரம் 42 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுமாம். அதுவே ஃபாஸ்ட் சார்ஜிங்கில் ஒரு மணி நேரம் 12 நிமிடத்தில் 80 சதவிகிதத்தையும், 2 மணி நேரம் 12 நிமிடங்களில் 100 சதவிகிதத்தையும் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-அக்செஸ் - புதிய வண்ண விருப்பங்கள்
புக்கிங்குடன் சேர்த்து புதிய டூயல் டோன் வண்ண விருப்பத்தையும் சுசூகி அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரே உடன் கூடிய மேட் ப்ளூ விருப்பத்துடன் சேர்த்து மொத்தம் நான்கு விருப்பங்களில் தற்போது இந்த ஸ்கூட்டர் கிடைக்கிறது. அதன்படி, மெட்டாலிக் மேட் பிளாக்/மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட், பேர்ல் கிரேஸ் ஒயிட்/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் க்ரே, பேர்ல் ஜேட் கிரீன்/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் க்ரே, மற்றும் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ/மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் க்ரே ஆகிய வண்ண விருப்பங்களை பயனர்கள் தேர்வு செய்யலாம்.
இ-அக்செஸ் - போட்டியாளர்கள்
விலை அடிப்படையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பிள் ஒன் ஜென் (ரூ.1.70 லட்சம்) மற்றும் ஏதர் 450 அபெக்ஸ் (ரூ.1.90 லட்சம்) மாடல்களுக்கு நடுவே சுசூகியின் அக்செஸ் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதேநேரம், செயல்திறன் அடிப்படையில் இதை விட சிறந்து விளங்கும் பல மாடல்கள் குறைந்த விலைக்கே சந்தையில் கிடைக்கின்றன. அதில் டாப் ஸ்பெக் பஜாஜ் சேடக்கின் விலை ரூ.1.23 லட்சம், ஏதர் ரிஸ்டா ரூ.1.53 லட்சம், டாப் ஸ்பெக் டிவிஎஸ் ஃக்யூப் ரூ.1.58 லட்சம் ஆகியவை அடங்கும். இதனால், அதிகப்படியான விலைக்கு இந்த குறைந்த அளவிலான செயல்திறன் என்பது, இ-ஸ்கூட்டரின் விற்பனையை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.





















