தக் லைஃப் பிரச்னையால் ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல்?
கமல் நடித்திருக்கும் தக் லைஃப் படத்தில் ஏற்பட்ட பிரச்னையால் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இனி விஜய் தீவிர அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் பட விவகாரத்தினால் ஜனநாயகன் படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத இடி விழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்வதை தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதை தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது இறுதி திரைப்படமாக சொல்லப்படும் அவரது தளபதி 69- ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதனை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜயுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தெலுங்கு படத்தின் ரீமேக்
தெலுங்கில் பாலையா நடித்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜூ விஜயின் வளர்ப்பு மகளாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கொடைக்கானல் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விஜய் படப்பிடிப்பு தளத்தில் அசைவ விருந்து வைத்துள்ளார். மேலும், ஜனநாயகன் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால் விஜயின் அரசியலுக்கு பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் விஜய் தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தீவிரப்படுத்தி வருகிறார்.
ஜனநாயகன் படத்திற்கு சிக்கல்?
கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிடவில்லை என்றால் இங்கு ஜனநாயகன் படம் ஓடாது என நெட்டிசன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். எக்ஸ் தள பக்கத்தில் கமலுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. KVN என்ற நிறுவனம் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ளது. தக் லைஃப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை போன்று தமிழ்நாட்டிலும் ஜனநாயகனை தடை செய்ய வேண்டும் என கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விஜய் ரியாக்ஷன் எப்படி இருக்க போகிறது என்பதுதான் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தக் லைஃப் படத்திற்கு தடை
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கன்னட அமைப்பினர் மற்றும் கர்நாடக திரைப்பட சங்கத்தினரும் தக் லைஃப் படத்தை பெங்களூருவில் வெளியிட தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய கோரி கர்நாடகா மாநில நீதிமன்றத்தை நாடினார். கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த சூழலில் தான் விஜய் நடித்து முடித்துள்ள ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.





















