Vijayakanth Death: இந்த நேரத்துல உங்க கூட இருக்க முடியல.. விஜயகாந்த் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வரும் விஜயகாந்துக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் சென்னை, மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நடுவே உடல்நலன் தேறி வீடு திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
தொடர்ந்து, இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தலைமை அலுவலகம் பகிர்ந்திருந்த நிலையில், இன்று காலை 6.10 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வரும் விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் என நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நெப்போலியன் இரங்கல்
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் நெப்போலியன், “தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!! அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐயகாந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!
அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள்,
நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!
கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…! வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்,
மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும்
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!” எனக் கூறியுள்ளார்.
விஷால், ரோஜா பதிவு
“கேப்டன் விஜயகாந்த் அண்ணா இறந்துவிட்டார் என செய்தி கேள்விப்பட்டேன். அண்ணா என்ன மன்னிச்சிடுங்க. இந்த நேரத்துல உங்க கூட இருக்க முடியல.. உங்க முகத்த ஒரு முறை பாத்து, உங்க கால தொட்டு கும்பிட்டு உங்க கூட இருந்து இருக்கணும். நான் வெளிநாட்டுக்கு வந்தது என் தப்பு. நான் உங்க கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 20 வருஷம் முன்னாடி நான் கேள்விப்பட்டு இருக்கேன், யாராவது பசியோடி வந்தா நீங்க சோறு போட்டு அனுப்புவீங்க. இந்த சமுதாயத்துக்கு இவ்வளவு பண்ணி இருக்கீங்க. ஒரு நல்ல மனிதர இழந்தத என்னால ஜீரணிக்க முடியல. அரசியல்வாதியா உங்க செயல்பாடு, ஒரு மனிதரா நீங்க பேர் வாங்கி இருக்கீங்க. உங்க பேர்ல கண்டிப்பா மேற்கொண்டு நல்லது பண்ணனும்” என கண்ணீர் மல்க அழுதபடி பதிவிட்டுள்ளார்.
I hav nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/Y4MEFfZfRw
— Vishal (@VishalKOfficial) December 28, 2023
ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா கூறியிருப்பதாவது “தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான் விஜயகாந்த் இறந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமுற்றேன். அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். தங்கமான இதயம் கொண்டவர், அவருடைய புனிதமான ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.