Thee Thalapathy: ‘திருப்பி அடிக்கும் போதுதான் யாரு நீன்னு புரியுமே’ .. வெளியானது வாரிசின் தீ தளபதி பாடல்!
வாரிசு படத்தில் இருந்து சிலம்பரசன் பாடிய ‘தீ தளபதி’ பாடல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.
மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில் இன்று 'தீ தளபதி' பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன் படி தற்போது தீ தளபதி பாடல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு முன்னுரிமை கொடுக்க கூடாது என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. பின்னர் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பிரச்னை முடித்துவைக்கப்பட்டது.
View this post on Instagram
அதை தொடர்ந்து வாரிசு படம் வெளியாக உள்ள அன்றைய தினமே அஜித்தின் துணிவு படமும் வெளியாவதால், படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தை தமிழகத்தில் விநியோகிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனத்தின் சார்பில், சத்யம் தியேட்டரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக்கூறி மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டது. இதன் மூலம் வாரிசு படம் உறுதியாக பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.