Vijay Sethupathi: வாழ்க்கை ஒரு வட்டம்! விஜய் சேதுபதி வாழ்க்கையில் நடந்த மேஜிக் சம்பவங்கள்!
வாழ்க்கை ஒரு மேஜிக் என்பது நிறைய இடத்தில் தோன்றியிருக்கிறது என தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்
தன் வாழ்க்கையில் நம்ப முடியாத சுவாரஸ்யமான விஷயம் என நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
பான் இந்தியா நடிகர்:
துணை நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்றைய தேதிக்கு அவர் தான் ஓர் ஆண்டில் அதிகமான படங்களில் நடிப்பவர். ரஜினி, விஜய், கமல், ஷாருக்கான் என தமிழ் தொடங்கி இந்தி மொழி வரைக்கு முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து விட்டார்.
இப்படியான விஜய் சேதுபதி அவ்வப்போது தன் நடிப்புக்கு தீனிபோடும் கேரக்டர்களிலும் தலைகாட்டுவார். அப்படியாக அவர் நடித்த படம் தான் “விடுதலை”. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட விடுதலை படத்தில் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
வாழ்க்கை ஒரு வட்டம்:
இந்நிலையில் தன் வாழ்க்கையில் நடைபெற்ற அதிசய சம்பவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் விஜய்சேதுபதி பேசியுள்ளார் அதில், “வாழ்க்கை ஒரு மேஜிக் என்பது நிறைய இடத்தில் தோன்றியிருக்கிறது. நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது கமல்ஹாசன் நடித்த நம்மவர் பட ஷூட்டிங் விஜயா கார்டனில் நடந்தது. அதில் வரும் கல்லூரி மாணவர்கள் கேரக்டரில் நடிக்க ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சென்றேன். ஆனால் என்னுடைய முகம் குழந்தைத்தனமாக இருப்பதாக சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தேன். இதையெல்லாம் நான் நினைச்சுக்கூட பார்த்தது இல்லை.
அதேபோல் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை படத்தின் ஷூட்டிங் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. அந்த மன்றத்துல ஓரமா நின்னுட்டு மேடையைப் பார்த்துட்டு இருந்தேன். ஆனால் சீதக்காதி படம் நடிக்கும்போது அதே மேடையில் ராஜாவாக நடிச்சேன். அந்த படத்தோட இயக்குநர் பாலாஜி தரணிதரன் கிட்டக்கூட இந்த நிகழ்வை சொன்னேன்.
இதுபோல நிறைய விஷயம் நடந்துருக்கு. வெற்றிமாறன் ஆபீஸூக்கு நானும், முருகதாஸூம் வாய்ப்பு கேட்டு போனோம். எதிரே வந்தவரிடம் வெற்றிமாறன் இருக்கிறாரா என கேட்டோம். கடைசியில் பார்த்தால் அந்த நபரே வெற்றி மாறன் தான். பின்னர் போட்டோ கொடுத்துட்டு வந்த பிறகு முருகதாஸூக்கு ஆடுகளம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்பதான் வெற்றிமாறனின் விடுதலை படம் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதேதான் மணிரத்னமிடமும் நடந்தது. பின்னாளில் நான் அவரின் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படம் நடித்தேன்” என விஜய் சேதுபதி கூறியிருப்பார்.
மேலும் படிக்க: Viduthalai 2: “சம்பவம் காத்திருக்கு..ரெடியா இருங்க” ; விடுதலை-2 பற்றி அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி