'6 years of Saithan : இன்றுடன் 6 ஆண்டுகள்..! சைத்தானாக மாறிய விஜய் ஆண்டனி..! பிச்சைக்காரன் வெற்றியை ஈடுசெய்ததா?
அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிப்பில் 'பிச்சைக்காரன்' படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து வெளியான சைத்தான் திரைப்படம் வெளியாகி இன்றும் 6 ஆண்டுகளை கடந்துவிட்டது.
ஒரு இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஒரு நடிகராக மாறிய விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தின் அமோகமான வரவேற்பை அடுத்து, வெளியான திரைப்படம் 'சைத்தான்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை கடந்து விட்டது.
6ம் ஆண்டில் சைத்தான் :
அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், கமல் கிருஷ்ணா, ஆடுகளம் முருகதாஸ், விஜய் சாரதி ஆகியோரின் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் 'சைத்தான்'. சட்டத்திற்கு எதிராக மனிதர்கள் மீது மருந்து பயன்படுத்தி பரிசோதனை செய்யும் ஒரு கும்பலிடம் ஒரு பெண் சிக்கி கொள்கிறாள். அதனால் பூர்வ ஜென்மத்திற்கு செல்லும் அவளது கணவன் அதனால் ஏற்படும் சிக்கல்கள். அந்த கும்பலிடம் சிக்கிய குடும்பம் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பது தான் சைத்தான் படத்தின் கதைக்கரு.
ஒரு அறிமுக இயக்குரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அவரே எழுதி இயக்கிய இப்படம் வழக்கமான மசாலா திரைப்படங்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான கதைக்களத்தை படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது இந்த பூர்வ ஜென்ம கதையை த்ரில்லிங்காக காட்சிப்படுத்திய விதம்.
சிறப்பான நடிப்பு :
நடிகர் விஜய் ஆன்டனியின் நடிப்பு அபாரமாக இருந்தது. சைலெண்டானா கதாபாத்திரமாக இருப்பவர் மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு ஒரு சைத்தானை போல மிரட்டலாக நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் ஆன்டனியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பிரம்மச்சாரி சர்மா என கதாபத்திரங்களின் சேஞ் ஓவரில் அசத்தலாக நடித்திருந்தார். கதாநாயகி அருந்ததி நாயரின் நடிப்பும் கச்சிதமாக பொருந்தியது. ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயாத் நம்மை 60 ஆண்டுகளுக்கும் முன்னர் உள்ள காலத்திற்கு கொண்டு சென்றார். இப்படத்திற்கு விஜய் ஆன்டனியே இசையமைத்து இருந்தார். சைத்தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்னவாக இருக்கும் என ரசிகர்களை மிகுந்த சஸ்பென்சில் வைத்திருந்தார் இயக்குனர்.
வசூல் ரீதியாக வெற்றி :
சைத்தான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. வெளியான முதல் நாளே 2.5 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டன. அதனை தெடர்ந்து நான்கு நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டன. மிகவும் துணிச்சலாக வெளியான சைத்தான் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
ஒரு நடிகராக விஜய் ஆன்டனி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தோடு தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் திரை வாழ்க்கையில் அமைத்த ஒரு சிறப்பான திரைப்படம் சைத்தான்.