அஜித் படத்தை இயக்குவது 15 வருட கனவு...விடாமுயற்சி படம் பற்றி மகிழ் திருமேணி
அஜித் படத்தை இயக்குவது தனது 15 ஆண்டுகால கனவு என விடாமுயற்சி பட இயக்குநர் மகிழ் திருமேணி தெரிவித்துள்ளார்

விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி இப்படத்தை இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. முழுக்க முழுக்க அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு தொடங்கி ஒருவருடம் ஆகியும் டைட்டிலை தவிர்த்து மற்ற அப்டேட் ஏதும் வராததால் இப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின. இதனிடையில் படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்து பின் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி படம் பற்றி தொடர்ச்சியாக நெகட்டிவிட்டு பரவி வர ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலரை வெளியிட்டது படக்குழு. இந்த டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸூக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு தொடங்கி முடிந்த வரை பல்வேறு போராட்டங்களை கடந்து திரையரங்கில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படம் பற்றி இயக்குநர் மகிழ் திருமேணி தனியார் பத்திரிகை ஒன்றில் பேசியுள்ளார்.
15 வருட கனவு
" எப்போதும் ஒரு படத்தின் முழு கதையையும் எழுதி முடித்தபின்னரே படத்தைப் பற்றி யோசிப்பேன். அப்போது தான் அஜித் சாரின் அடுத்த படத்தை நான் இயக்கப் போகிறேன் என அஜித் சார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். பின் அஜித் சாரும் பேசி இதை முடிவு செய்தார். அஜித் சார் படத்தை இயக்கவேண்டும் என்பது 15 ஆண்டு கனவு. இப்போது தானாகவே அந்த வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியதைப் போல் பேசினார் அஜித். ஒரு சாதாரண மனிதன் தன்னையும், தன்னுடைய சின்ன உலகையும் காப்பாற்றிக்கொள்வதற்காக செய்கிற முயற்சிதான் இந்தப் படத்தின் ஒன்லைன்" என மகிழ் திருமேணி தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

