பேட் கேர்ள் பட டிரைலரை நீக்க உத்தரவு.. மீண்டும் தொடரும் சர்ச்சை.. வெற்றிமாறனுக்கு வந்த புதிய சிக்கல்!
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலரை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். பேட் கேர்ள் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
பேட் கேர்ள் படத்தின் டீசரில், நாயகி, தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், என் விருப்பத்தின்படி வாழ வேண்டும் என்பது போன்ற காட்சிகளும் இடம்பிடித்தன. அதனோடு ஆண் நண்பருடன் உடலுறவு வைத்துக்கொள்வது, டேட்டிங் செல்வது என அனைத்தும் பள்ளியில் படிக்கும் போது நடப்பது போல காட்சிகள் இடம்பிடித்திருந்தன. இதை பார்த்த சிலர் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை தவறாக சித்தரிப்பதாகவும், இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு சில அமைப்பினர் கடும் வாதம் செய்தனர். அதைத்தொடர்ந்து படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சங்கரன்கோவிலை சேர்ந்த ராம்குமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில் பேட் கேர்ள் படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இது பாலியல் குற்றம் எனவே இந்த டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்க விசாரித்த நீதிபதி, யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டிரைலரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் பேட் கேர்ள் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். பெண் சுதந்திரத்தை பற்றியும், பெண்களை புனிதமாகவும், கடவுளாகவும் போற்றுவதை கைவிடுங்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.






















