கொங்கு நாட்டு தங்கம் - செங்கோட்டை சிங்கம்; பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்!
ஏ.வி.எம். ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா உடல் நலக் குறைவு காரணமாக இன்று பிப்ரவரி 4ஆம் தேதி காலமானார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை புஷ்பலதா. செட்டிநாடு கத்தோலிக் குடும்பத்தை சேர்ந்த புஷ்பலதா 8 குழந்தைகளில் 5ஆவதாக பிறந்தவர். 9 வயது முதலே பரதநாட்டியம் கற்று தேர்ந்துள்ளார். கடந்த 1955 ஆம் ஆண்டில், நடிகர் எஸ்.ஏ. நடராஜன் தயாரித்து இயக்கிய நல்ல தங்கை என்ற படத்தில் சிறப்பு ரோலில் நடித்தார். சினிமாவில் கேமரா முன்பு தோன்றியது இந்தப் படத்தில் தான். சேரபாகுரா சேதேவு என்ற தெலுங்கு படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான புஷ்பலதா தமிழில் கொங்கு நாட்டு சிங்கம் என்ற படத்தின் வாயிலாக தன்னை ஹீரோயினாக அறிமுகம் செய்து கொண்டார். இந்தப் படத்தில் எம் ஆர் ராதா ஹீரோவாக நடித்தார்.
கொங்கு நாட்டு சிங்கம் படத்திற்கு பிறகு பணம் பந்தியிலே, சாரதா, பார் மகளே பார், நானும் ஒரு பெண், கற்பூரம், ஆலயமணி, போலீஸ்காரன் மகள், ஏழை பங்காளன், எங்கள் தங்கம், நீதிக்கு தலைவணங்கு, நவரத்தினம், உரிமைக்குரல், தாயே உனக்காக, வசந்த மாளிகை, வந்தாளே மகராசி, பகலில் ஒரு இரவு, பூ வாசம், நான் அடிமை இல்லை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1955ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரையில் 100க்கும் அதிகமான படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நானும் ஒரு பெண் படத்தில் ஹீரோவாக நடித்த ஏவிஎம் ராஜன் உடன் இணைந்த நடித்த புஷ்பலதா அவருடன் காதல் வயப்பட்டார். இதையடுடுத்து 1964ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகளில் ஏவிஎம் ராஜன் மற்றும் புஷ்பலதாவும் ஒருவராக திகழ்ந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள். அதில் ஒருவர் தான் நடிகை மகாலட்சுமி. நடிகையும் தாண்டி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். புஷ்பலதா 2 படங்களை தயாரித்துள்ளார். ஆனால், அவர் தயாரித்த 2 படங்களும் தோல்வி படங்களாக அமைந்துவிட்டன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், எம்.ஆர். ராதா, எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், கமல் ஹாசன், டி ராஜேந்தர் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் 87 வயதாகும் புஷ்பலதா சென்னையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று பிப்ரவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

