Veeran, KatharBasha Endra Muthuramalingam: வீரன் Vs காதர்பாட்சா... யார் கொடி பறக்குது... பட்டையைக் கிளப்பும் வசூல் நிலவரம்!
வீரன் படத்தை மரகத நாணயம் புகழ் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். மற்றொரு புறம் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தை பிரபல இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார்.
வீரன், காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படங்களின் நான்கு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரன் Vs காதர்பாட்சா
ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் திரைப்படமும், ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படமும் கடந்த மே 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன.
வீரன் படத்தை மரகத நாணயம் புகழ் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். மற்றொரு புறம் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தை பிரபல இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஃபேன்டஸி காமெடியாக ஆக்ஷன் கலந்து வீரன் படம் உருவாகியுள்ள நிலையில், கிராமத்து வாசனையுடன் தென் தமிழக மக்கள் சார்ந்து முத்தையா முத்திரயுடன் காதர்பாட்சா திரைப்படம் உருவாகியுள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம்
இன்றுடன் இப்படம் வெளியாகி 4 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், இப்படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி வீரன் திரைப்படம் முதல் நாள் 1.3 கோடிகளும், இரண்டாம் நாள் 1.65 கோடிகளும், மூன்றாம் நாளான நேற்று 2 கோடிகளையும் வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுவதும் 4.95 கோடிகள் வசூலித்துள்ளது.
மற்றொருபுறம் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம், முதல் நாள் 1.1 கோடிகளும், இரண்டாம் நாள் 1.22 கோடிகளும், மூன்றாம் நாள் 1.32 கோடிகளும் வசூலித்துள்ளது. நான்காம் நாள் 96 லட்சங்களைத் தோராயமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக இதுவரை இந்தியா முழுவதும் 4.6 கோடிகளை வசூலித்துள்ளது.
இந்தத் தகவல்களை இந்திய பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் பகிர்ந்துள்ளது.
சூப்பர் ஹீரோ Vs கிராமியக் கதை
முன்னதாக கோலிவுட்டில் வெளியான சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் தோல்வியையே தழுவிய நிலையில், வீரன் படம் ஒரு தரமான சூப்பர் ஹீரோ படம் என ரசிகர்கள் ஒருபுறம் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் ஹிப் ஹாப் ஆதியை வழக்கம்போல் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
அதேபோல் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தில், வழக்கமான முத்தையா படங்களைப் போல் அல்லாமல், சாதீயக் குறியீடுகள் தாண்டி மத ஒற்றுமையை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஆர்யாவின் நடிப்பும், எக்கச்சக்க சண்டைக் காட்சிகளும் ட்ரோல்களை சம்பாதித்து வருகின்றன.
ஆர்யாவின் 34ஆவது படமான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வீரன் படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழாவே இப்படத்துக்கு இசையமைத்தும் உள்ளார். அனிருத் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.