Varalaxmi Sarathkumar : பர்சனல் வாழ்க்கையால் கோட்டைவிட்டேன்.. 8 வருஷம் வீணாப்போச்சு - வரலட்சுமி சரத்குமார்
Varalaxmi Sarathkumar : வாழ்க்கையை எப்போதுமே பிளான் பண்ணாதீங்க. என்ன நடக்குதா அது கூடவே நீங்களும் வாழ பழகிக்கோங்க.
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக பல சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வரும் திறமையான நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு மிகவும் ஸ்வாரஸ்யமாக தன்னுடைய திரைப்பயணத்தில் அவர் செய்த தவறுகள், சாதனைகள் என பலதரப்பட்ட விஷயம் குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. நான் சினிமாவில் வருவதற்கு முன்னர் இப்போ நமக்கு 22 வயசாகுது, 28 வயசுக்குள்ள பெரிய ஹீரோயினா ஆகிடணும், 32 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டு 34 வயசுக்குள்ள குழந்தை பெத்துக்கணும் என பல பிளான் போட்டு வைச்சு இருந்தேன். ஆனா எனக்கு இப்பவே 38 வயசாகுது இப்போதான் என்னோட வாழ்க்கையே ஆரம்பிச்சு இருக்கு, இப்போ தான் நல்ல நல்ல ரோல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதனால வாழ்க்கையை எப்போதுமே பிளான் பண்ணாதீங்க. என்ன நடக்குதா அது கூடவே நீங்களும் வாழ பழகிக்கோங்க.
வாழ்க்கையில் லட்சியம் வைத்து கொள்ளலாம். எனக்கு கூட நல்ல நல்ல கேரக்டர்கள் செய்ய வேண்டும் என ஆசை. அது எனக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கு. சினிமாவில் நான் 10 வருஷமா இருந்தாலும் என்னுடைய முதல் படம் 'போடா போடி' படத்தின் ஷூட்டிங் 2009ம் ஆண்டு தொடங்கியது. ஆனா அது 2012ம் ஆண்டு தான் ரிலீஸானது. அந்த படத்துக்கு அப்புறம் 8 வருஷம் நான் என்னோட கேரியரில் ஃபோகஸ் செய்யாமல் பர்சனல் வாழ்க்கையில் ஈடுபட்டதை தான் நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன்.
அந்த வயசுல நம்ம செய்யுறது தப்புன்னு தெரியாது. என்னோட ஃபோகஸ் அப்பவே சரியாக இருந்து இருந்தால் நான் இன்னும் நிறைய படங்களில் நடித்திருப்பேன். நான் நிறைய யோசிப்பேன். ஏன் எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரமாட்டேங்குது. நான் அழகா இல்லையா, நல்லா டான்ஸ் ஆடலயா, நல்லா தமிழ் பேசலையா இப்படி பல கேள்விகளை நானே கேட்டுக்கொண்டே இருப்பேன். அதையே நினைச்சு கவலைப்படுவேன். ஆனால் அந்த சறுக்கல்கள் அனைத்துமே என்னை பலப்படுத்தியுள்ளது.
நான் கொஞ்சம் லேட்டாக வந்தாலும் எனக்கு கிடைத்த கேரக்டர்கள், எனக்கு கிடையும் மரியாதை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நான் மிக பெரிய நடிகர்களுக்கு எல்லாம் வில்லியாக அவர்களை எதிர்க்கும் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை பெரிய பாக்கியமாக நினைக்கிறன். அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்தான் என பேசி இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.