Vairamuthu: "இந்தி மொழியின் மீது வெறுப்பு இல்லை..அச்சம் இருக்கிறது" : கவிப்பேரரசு வைரமுத்து காட்டம்..!
Hindi Imposition : வடமொழி கலந்தபொழுது எல்லாம் தமிழ் சிதைந்து இருக்கிறது என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Tamil Language : ஒருவருக்கு 3-வது மொழி கற்றுக்கொள்ளவேண்டியது என்பது சூழலால் வருகிறது. அதனை திணிப்பாக மாற்றக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், குழந்தைகளுக்கு அவர் எழுதிய திருக்குறள் தொடர்பாக போட்டிகள் என இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிப்பேரரசு வைரமுத்து பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளூவர் திருநாளுக்கு தமிழர் கூட்டம் அவரின் பெருமையும், செல்வாக்கும் ஓங்குவதை காட்டுகிறது. திருவள்ளுவர் , திருக்குறள் என்பவை வெறும் இலக்கியம் மட்டும் இல்லை. திருவள்ளூவரை பண்பாட்டு அடையாளமாக, வரலாற்றின் அடையாளமாக, இனத்தின் குறியீடாக நாம் பார்த்து பழகியிருக்கிறோம். அவர் தமிழர்களின் ஞான அடையாளம். அவரையொட்டி சிந்திக்கிற பொழுது, தமிழ்நாட்டில் கடந்த வாரம் அதிகமாக பேசப்பட்ட இருமொழிக் கொள்கை குறித்து நான் கருத்து சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இரண்டு முன்னாள் துணைவேந்தர்கள் முன்னிலையில் என் கருத்தை முன்வைக்கிறேன். திருக்குறள் என்பது நாங்கள் ஓதுகிற தமிழ் வேதம். திருவள்ளுவரை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம் என்று தான்பொருள் கொள்கிறோம்.
இருமொழி கொள்கை தான் தமிழர்களுக்கு உகந்த கொள்கை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தான் தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா? - இந்தி மொழி கூடாது என நாங்கள் கொடி பிடிக்கிறோம் என்றால் இந்தி திணிப்பு கூடாது என உறுதிபட கூறுகிறோம். இந்தி மொழி திணிப்பை தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். நண்பர்களே ஆங்கிலமும் தமிழும் தமிழர்களுக்கு தாய்மொழியாகவும், உலக மொழியாகவும் திகழ்கிற போது இந்தி என்பது இந்த மூன்றாம் மொழியாக திணிப்பாகி விடுகிறது.
இப்போது அது திணிக்கப்படாத வகையில் கற்க வேண்டியவர்கள் இந்தி கற்றுக் கொள்வார்கள்.உதாரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை ஆள வந்திருக்கிற ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் தமிழை கற்றுக் கொண்டார்கள். தமிழை நாங்கள் அதிகாரிகள் மீது, வடநாட்டில் இருந்து வருபவர்கள் மீதோ திணிக்கவில்லை. 3ஆம் மொழி என்பது சூழலால் வருவது. பின் ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? என்ற கேள்வி வருகிறது. தாய்மொழி என்பது பண்பாட்டு மொழி, ஆங்கிலம் என்பது நாகரீக மொழியாகும். ஒரு மனிதன் பண்பாடு மற்றும் நாகரீகத்துடன் திகழ இவை இரண்டும் போதும் என நினைக்கிறோம். ஆங்கிலம் உலக மொழி, அந்த உலகத்துக்குள் தான் வடநாடும் இருக்கிறது. அதனால் வடநாட்டை கடக்க எங்களுக்கு ஆங்கிலமே போதும். இந்தி மொழியின் மீது வெறுப்பு இல்லை ஆனால் அச்சம் இருக்கிறது.
வடமொழி கலந்த பொழுது எல்லாம் தமிழ் சிதைந்து இருக்கிறது. இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டது என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அந்த மொழி ஏன் குறுகியது என்பது வரலாறு. தமிழில் கலந்த வடமொழி வேறொரு மொழியாக பிரிகிறபோது நாங்கள் நிலத்தை இழந்தோம். ஒரு மொழி நிலத்தை பிரித்து விடுகிறது. அப்படி நாங்கள் நிறைய இழந்து விட்டோம். இனியும் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார்.