Happy Birthday FAFA : தொடக்கமே படுதோல்வி.. தேள்போல கொட்டிய விமர்சனம்.. மீண்டு வந்து சாதித்த பஹத் ஃபாசில்..
சோஷியல் மீடியாவுக்கும் உருவக்கேலி என்பது புதிதல்ல என்பதால் நஸ்ரியாவுக்கு இப்படி ஒரு கணவரா? என வறுத்தெடுக்கப்பட்டார் பஹத்.
தமிழ் சினிமாவில் க்யூட் குயினாக வலம்வரத் தொடங்கிய சமயம் நஸ்ரியாவுக்கு பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்கள் கூடினர். செல்போன் வால்பேப்பராக நஸ்ரியாவை வைக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சர்ரென தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார் நஸ்ரியா. ஆனால் சினிமாவில் டாப் கியரை போடும் நேரத்தில் திருமணம் என்ற குண்டை தூக்கிப்போட்டார் நஸ்ரியா. அட என்னப்பா என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் திரும்பியது நஸ்ரியாவின் கணவர் யாரென என்பதுதான். மலையாளத்தில் ஹீரோவாம், சினிமா பின்புலமாம் என பல பேச்சுகளுக்கு இடையே முன் நெற்றி ஏறிய பஹத் பாசில் பலருக்கும் அறிமுகம் ஆனார். இந்த சமூகத்தில் பலருக்கும், இந்த சோஷியல் மீடியாவுக்கும் உருவக்கேலி என்பது புதிதல்ல என்பதால் நஸ்ரியாவுக்கு இப்படி ஒரு கணவரா? என வறுத்தெடுக்கப்பட்டார் பஹத்.
இதெல்லாம் 2014 தொடக்கத்தில்தான்.இன்று பஹத் என்றால் தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதுவும் விக்ரம்படத்துக்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் நடிப்பு ராட்சசன் பஹத். ஆனால் பஹத்தின் நடிப்புக்கு இன்னமும் தமிழ் சினிமா தீனி போடவில்லை என்பதை அவரை தொடக்கத்தில் இருந்து ரசித்த ரசிகர்கள் நன்கறிவர். நடிப்பென்றால் கமல் என்பது இந்திய சினிமா கண்ட விஷயம்தான்.ஆனால் உங்களுடைய சினிமாவாரிசாக யாரை சொல்வீர்கள் என்று கமலிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்ன லிஸ்டில் இருந்தவர் பஹத்.
பஹத்தின் ப்ளஸ் அவரது கண்கள். பஹத் ஒட்டுமொத்த நடிப்பையும் கண்ணிலேயே காட்டிவிட்டு அந்த கேரக்டரை கன்வே செய்துவிடுவார் என்பது அவரை இயக்கிய இயக்குநர்களின் பொதுவான கருத்து. மலையாள சினிமாக்களில் அதனை நாம்கண்டிப்பாக ஃபீல் செய்யவும் முடியும்.
அன்னையும் ரசூலும், நார்த் 24 காதம், பெங்களூர் டேஸ், மகேஷிண்ட பிரதிகாரம், கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி, வர்தன், சியூசூன், ட்ரான்ஸ், சமீபத்தில் வெளியான மலையன் குஞ்சு என பஹத்தின் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக பல படங்களை சொல்லலாம். கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் ஒரு நக்கல் சிரிப்புடன் ஒரு கொடூரனின் முகத்தை பிரதிபலிக்கும் பஹத்தை வெறுக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு படத்திலும் பஹத்தை தனியாக எடுத்து பிரித்துப்படிக்கலா. அந்த அளவுக்கான சூப்பர் ஃபெர்மார்மர் பஹத்.
விஜயின் காதலுக்கு மரியாதை படமும் அனைவருக்கும் பரீட்சயம். அந்தப்படத்தின் இயக்குநர்தான் பஹத்தின் தந்தை பாசில். தமிழிலேயே பல வெற்றிப்படங்களை இயக்கிய பாஸின் தன்னுடைய மகன் பகத்துக்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கமுடியாமல் தள்ளாடினார். தன்னுடைய தந்தை பாசிலின் இயக்கத்தில் கையேதும் தூரம் என்ற படத்தில் அறிமுகமானார் பஹத். ஆனால் அவருக்கு பெரிய தோல்வியைத் தந்தது. பல புதுமுகங்களை வெற்றியாளராக்கிய பாஸில் சொந்த மகனை ஆளாக்காதது ஏன் என பலரும் தேள்போலக் கொட்டினர். இதனால் மனமுடைந்த பஹத் என் அப்பா மீது குறையில்லை. எல்லாமே என்னுடைய தப்பு எனக் கூறி அமெரிக்கா பறந்தார் பஹத். 5 ஆண்டுகள் அமெரிக்காவில் படிப்பு முடித்த பஹத் மீண்டும் மலையால சினிமாவில் கால்வைத்தார். தொடக்கத்தில் ஒரு குறும்படம்மூலம் கவனிக்க வைத்த பஹத் சாப்பா குரிஷு என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். அதன்பின்னர் பஹத்தின் வளர்ச்சி யாராலும் தொடமுடியாத உச்சத்துக்கு சென்றது. இதற்கிடையேதான் காதல்மலந்து நஸ்ரியாவை கரம்பிடித்தார் பஹத்.
அடுத்தடுத்த வெற்றி மலையாளம்தாண்டி பஹத்தை இந்திய சினிமாவுக்கு எடுத்துச்சென்றது. தமிழில் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன் என பஹத்,கோலிவுட்டில் முகத்தைக் காட்டினார். ஆனால் விக்ரம்படம்தான் பஹத்துக்கு நல்ல ரீச் கொடுத்தது. அதேபோல வித்தியாசமான மொட்டை கெட்டப்பில் புஷ்பாவில் வில்லனாக தெலுங்கிலும் குதித்துள்ளார் பஹத்.
அப்பா இயக்குநர் என்பதால் சினிமாவுக்கான எண்ட்ரி எளிமையாக இருந்தாலும் சினிமாவின் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெரும்பாடுபட்டவர் பஹத். நடிப்பு தொடர்பாக தொடக்கத்தில் பல விமர்சனங்களை தாங்கிய பஹத்தை இனி இந்திய சினிமா தவிர்க்கவே முடியாது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என இனி பஹத் பயணிக்கப்போகும் தூரம் மிக நீளமானது. அதற்கு அவர் கண்களே சாட்சி.