63 வயதை எட்டும் இயக்குநர் ஷங்கர் பற்றி பலர் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் ஷங்கர் இன்று தனது 63 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரைப் பற்றி பலர் அறியாத தகவலைப் பார்க்கலாம்

இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள்
வெள்ளித்திரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன சினிமா ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட ஒரு இயக்குநர் வருவார். அந்தவகையில் 90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் பல்வேறு பிரம்மாண்டங்களை ஏற்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இயக்குநர் ஷங்கர், இன்று (ஆகஸ்ட் 17) தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஷங்கர் இயக்கிய படங்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் ஷங்கரைப் பற்றி ரசிகர்கள் அறியாத பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சிலதை இங்கே பார்க்கலாம்
சங்கரைப் பற்றி பலர் அறியாத தகவல்
முன்னொரு காலம் வந்த 'குங்குமம்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் சங்கர். தனக்கு ஒரு மகன் பிறந்தால் 'ஷங்கர்' எனப் பெயர் வைப்பேன் எனச் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கரின் தாயார். ஆண் குழந்தையே அவருக்குப் பிறக்க அவரே 'ஷங்கர்' ஆகிவிட்டார்.
உண்மையில் நடிக்க ஆசைப்பட்டு கோலிவுட் வந்தவர்தான் ஷங்கர். பாதை திசை மாற்ற சின்ன சின்ன வேடங்களில் படத்தில் நடித்தார். அது அத்தனையும்யும் காமெடிதான்.
எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமா கற்றுக் கொண்டார். 1993ல் ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் முதல் படமே அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலில் 2டி அனிமேஷனை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார் ஷங்கர். மட்டுமின்றி மிகுந்த பொருட்செலவில் பிரமாண்ட திரைப்படங்களை உருவாக்குவதில் முன்னோடி என்று கூடச் சொல்லலாம். அந்தக் காலத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மெகா பட்ஜெட் திரைப்படம் ‘சந்திரலேகா’. என்றாலும் பிரமாண்டம் என்றாலே ஷங்கர் என்னும் பிராண்ட் விழுந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது அத்தனையும் திரைப்படங்களிலும் உள்ள காட்சிகள் நமக்கு ஏற்படுத்தும் பிரமிப்பு.
இத்தனைக்கும் ஷங்கர் முதன் முதலில் இயக்க விரும்பிய படம், ‘அழகிய குயில்’ என்கிற எளிமையான காதல் கதை. ஒருவேளை இது வெளியாகி வெற்றி பெற்று விருதுகள் வாங்கியிருந்தால் அவரின் பாதை வேறு வகையாக மாறியிருக்குமோ, என்னமோ!
ஷூட்டிங் வருவதற்கு முன்பு என்ன ஷாட், எவ்வளவு நேரம் போகும், அதன் அளவு எவ்வளவு என்பது வரை அவ்வளவு கச்சிதமாகத் தயாராக வருவார். அதில் பிசகியதே கிடையாது. அவரது வெற்றிக்குத் திட்டமிடலே முதல் காரணம் என்று பலரும் சொல்வதுண்டு.
தினமும் காலை 5 மணிக்கு எழுந்துடுவார். சின்னதாக உடற்பயிற்சி, தினசரி பத்திரிகைகள், வார இதழ்களை ஒன்றுவிடாமல் வாசிச்சுடுவார். அரசியலின் மீது கூர்ந்த கவனிப்பு உண்டு. துல்லியமான ஞாபக சக்தி. ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தித்தால் கூட ஒருவரின் பெயரைச் சொல்லி நலம் விசாரிசிக்கக் கூடியவர். ஷங்கரிடம் உதவி இயக்குநராக குறைந்தது 100 பேர்களாவது வந்து போயிருப்பார்கள்.
குறிப்பிட்டு சொல்வதனால ஏ.வெங்கடேஷ், பாலாஜி சக்திவேல், காந்தி கிருஷ்ணா, மாதேஷ், இளங்கண்ணன், கார்த்தி, ஹோசிமின், வசந்தபாலன், அட்லி என இன்னமும் தொடர்ந்து சினிமாவில் மிளிர்வோர் எண்ணிக்கையும் ஜாஸ்தி
இப்படி திரையுலகில் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்ப இன்னிக்கும் புது திரைப்படங்களை வழங்க முயலும் இந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்





















