Udhayam Theatre: அஸ்தமனம் ஆகும் உதயம் தியேட்டர்! தொடங்குகிறது இடிக்கும் பணி - கண்ணீரில் ரசிகர்கள்
Udhayam Theatre: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது.

Udhayam Tதமிழ் திரையுலகின் தலைநகரமாக திகழ்வது சென்னை. தமிழ்நாட்டின் மிகப் பழமையான திரையரங்குகள் பலவும் சென்னையில் உள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது உதயம்.
இடிக்கப்படும் உதயம் தியேட்டர்:
சாமானிய மக்கள் குடும்பங்களுடன் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு ஏற்ற திரையரங்கமாக இருந்து வந்தது உதயம் தியேட்டர். 1983ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வந்த உதயம் தியேட்டரின் 42 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வருகிறது. உதயம் தியேட்டரை இடிக்கும் பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. இது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உதயம் தொடங்கியது எப்படி?
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட இந்த திரையரங்கத்திற்கு உதயம் என்று பெயர் சூட்டப்பட்டதற்கு மிகப்பெரிய காரணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் இருந்து வந்த நாராயணன், சுப்ரமணியம், கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகிய 6 சகோதரர்கள் நெல்லையில் இருந்து சென்னைக்கு திரையரங்கும் தொடங்கும் கனவுடன் வந்தனர்.
முதல் படம்
அவர்கள் கனவுக்கு உயிர் கொடுக்கும் விதமாக தொடங்கப்பட்ட திரையரங்கம்தான் உதயம் திரையரங்கும். 1983ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சிவப்பு சூரியன் திரைப்படம்தான் இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ஆகும். ரஜினிகாந்தின் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படம் உதயம் தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடியது.
ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தின்போது சென்னையில் பெரும் புயல் வீசியது. அப்போது புயல் மழையையும் பொருட்படுத்தாமல் திரையரங்கில் ரசிகர்கள் குவிந்தது மறக்கவே முடியாத சம்பவம் ஆகும். கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களின் வெற்றிப் படங்களும் உதயம் திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாகம அமைந்தது.
கடைசி படம்:
அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் தொடங்கி, பல இளம் நடிகர்களின் படங்களும் உதயம் தியேட்டரில் வெற்றிப்படங்களாக ஓடியுள்ளது. உதயம், மினி உதயம், சூரியன் மற்றும் சந்திரன் என நான்கு திரையரங்குகளுடன் இந்த உதயம் தியேட்டரில் இதுவரை கோடிக்கணக்கான மக்கள் திரைப்படம் பார்த்து இருப்பார்கள். சென்னையில் வணிக வளாகங்களில் திரையரங்குகள் வருவதற்கு முன்பு, உதயம் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்த திரையரங்கில் கடைசியாக ஓடிய படம் புஷ்பா 2 ஆகும்.
தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் உதயம் தியேட்டரின் வாசலில் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும். அஜித்தின் ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் அஜித்தின் தொடக்கப் பாடலே உதயம் தியேட்டரிலே என்று இருக்கும்.
ரசிகர்கள் வேதனை:
கோலிவுட்டிற்கு காலத்திற்கும் நெருக்கமான நினைவுகளை கொண்ட உதயம் தியேட்டரின் சகாப்தம் முடிவுக்கு வருவது ரசிகர்களின் நெஞ்சை ரணமாக்கியுள்ளது. உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக குடியிருப்பு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பழமையான பல திரையரங்குகள் மூடப்பட்டும், இடிக்கப்பட்டும் குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

